27 நவம்பர், 2010

இலங்கை - இந்திய நட்புறவு எக்காலத்திலும் பாதிப்படையாது எஸ். எம். கிருஷ்ணா

வட பகுதியில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மீள்குடியமர்த்துவதில் சில பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என நம்புகிறோம். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸணும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் கைச்சாத்திட்ட பின்னர் கூட்டுச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்,

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் இலங்கைக்கு வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக இந்தியா 50,000 வீடுகளை அமைத்துக்கொடுக்கவுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தமானது இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளை மேலும் வலுவாக்கும். இக்கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தின் ஊடாக மீன்பிடி வர்த்தகம், முதலீடுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவுகள் வலுப்படும்.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும் அமைக்கப்படும் இந்தியத் துணைத் தூதரகங்கள் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் சிறந்த தளமாக அமையும். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு ஏற்படும்.

இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டுப் பிரநிதிகளும் விரைவில் கூடி இவ்விடயம் குறித்து ஆராய இணங்கியுள்ளோம்.

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. வீடமைப்பு, புகையிரதப் பாதை அமைப்பு, கண்ணிவெடி அகற்றல், வடக்கின் விவசாய அபிவிருத்தி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணம், கே. கே. எஸ். துறைமுக அபிவிருத்தி, யாழ். பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வேறெந்தவொரு நாட்டிலும் தங்கியில்லை. ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்தது. இலங்கை எந்தவொரு நாட்டுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக