வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடையும் தருவாயிலேயே உள்ளன.
ஒரு வருடத்துக்குள் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு கிடைத்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதுடன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது.
இச்சந்திப்பின்போது,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக