27 நவம்பர், 2010

அதிகாரத்தை பரவலாக்காது அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது : செல்வராசா எம்.பி.

அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு இல்லை. யுத்தம் நிறைவடைந்துள்ள நாட்டில் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பியான பொன். செல்வராசா தெரிவித்தார்.

அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் அதிகாரத்தை பரவலாக்க முடியும். அவருக்கு நாட்டில் எதிரி இல்லை. இருந்த ஒரேயொரு எதிரியும் சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நல்லிணக்க விவகாரம் எதுவுமே 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது ஜனாதிபதி கூறுவார் என எதிர்பார்த்தனர். இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மக்களின் நலன்மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஜேர்மனிய பிரதிநிதி கூறியுள்ளார்.

வியட்நாமில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதனால்தான் மக்கள் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டனர்.

அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையில்லை. ஆனால் அதிகார பரவலாக்கல் முக்கியமானது. அவை இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகார பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது. அதிகாரத்தை பரவலாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று அரசாங்கம் அன்று கூறியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவருக்கு அதிகாரமும் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 3000 ரூபாவும், படையினரின் மூன்றாவது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

போரினால் அவையவங்களை இழந்த அப்பாவி தமிழ் மக்கள், விடுவிக்கப்பட்ட புலிகளின் பழைய வீரர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்த முடியாது தவிக்கின்றனர்.

இராணுவ குடும்பத்தினருக்கு வழங்குகின்ற சலுகைகளை பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நானும் மூன்று எம்.பிக்களும் பங்கேற்றோம். அதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டோம். நல்லதை நல்லது என்றும் தவறை தவறு என்றுமே கூறுவோம். சகலதையும் விமர்சிக்க மாட்டோம்.

ஜனாதிபதிக்கு இன்று எதிரி என்று யாருமே இல்லை. இருந்த ஒரு எதிரியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தையும் தருணத்தையும் அரசாங்கமும் ஜனாதிபதியும் தவற விட்டு விடக் கூடாது என வலியுறுத்தி கூறுகின்றோம்.

எங்களுடைய இலட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 150 பேரை காணவில்லை. இதற்கு யார் பொறுப்பு கூறப் போகின்றார்கள். இராணுவத்தினரா? புலிகளா? எனினும் மக்கள் இன்னும் கண்ணீரும் கம்பலையுமக்ஷிக இருக்கின்றனர்.

இதனால் இளம் மனைவியர் மற்றும் பெற்றோர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். அதற்கெதிராக வடக்கு கிழக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக