27 நவம்பர், 2010

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளவில்லை : பீரிஸ்

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால், தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வில் கலந்துகொண்ட பின்னர் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பீரிஸ் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு நடைபெற்றது. அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. பல உடன்பாடுகளுக்கு நாங்கள் வந்தோம். இந்திய இலங்கை உறவுகளின் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டன.

நாங்கள் தற்போது சிறந்ததொரு சூழலில் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இந்தியா வழங்கிவரும் உதவிகள் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் வழங்கப்படும் ஒத்துழைப்பு வட மாகாணத்தில் விவசாய நடவடிக்களை கட்டியெழுப்ப இந்தியாவின் உதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடினோம்.

மேலும் ரயில்வே அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைக்க எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சி செல்லவுள்ளார். ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பித்துவைக்க அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. பொருளாதார விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். உடன்பாட்டுக்கு வந்துள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்கின்றோம்.

இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினோம். அதாவது இவ்விடயம் தொடர்பில் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டோம். இது தொடர்பாக அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே இந்த கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டுள்ளோம். சுற்றுலாத்துறை தொடர்புத்துறை போன்றவற்றை பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் சேவையை நடத்துவது தொடர்பில் இறுதி உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பேச்சு நடத்தினோம். தகவல் தொழில் நுட்பத்தை கிராமப்புறங்களுக்கு கொண்டுசெல்லும் ஜனாதிபதியின் திட்டம் குறித்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள விவசாய பொறிறியல் பீடங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் பறிமாற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தோம். இலங்கையில் 2600 ஆம் ஆண்டு பௌத்த விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்துவைப்பதானது பாரிய மைல் கல்லாகும்.

கேள்வி: அரசியல் தீர்வு விடயம் குறித்து பேசப்பட்டதா?

பதில்: அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால் தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம். குழப்பகரமான நிலைமையில் எங்கிருந்தாவது ஒரு விடயத்தை ஆரம்பித்தாகவேண்டும்.

அதாவது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்கள் போன்றவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மீன்படி தொழில் விவசாயம் வீட்டுப் பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை நீர் விடயம் என்பன முதலில் ஆரக்ஷியப்படவேண்டும். எனவே நாங்கள் அங்கிருந்துதான் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. அதற்காக நீண்டகால விவகாரங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றோம். எமது நிகழ்ச்சி நிரலில் அனைத்தும் விடயங்களும் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக