18 அக்டோபர், 2010

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு; சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக