வட மேல் மாகாணத்தில் அரச காணிகளை பலாத்காரமாக சுவீகரித்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண செயலாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
வடமேல் மாகாணத்தில் பல்வேறு வித செல்வாக்குகளைப் பயன்படுத்தி சிலர் 150, 200 ஏக்கர் என பெருமளவான அரச காணிகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இத்தகையோருக்கெதிராக உடனடியாக சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொண்டார்.
இந்நடவடிக்கைகளுக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்ப டுத்தும் அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பூரண ஒத்துழைப் பினை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதிக் கேட்டுக் கொண்டார்.
வடமேல் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாதம்பை கூட்டுறவு சங்க மண்டத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் அரச உயரதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இப்பிரதேசங்களில் குளங்களுக்கு அருகிலுள்ள காணிகளும் இவ்வாறு பலாத்காரமாக அபகரிக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்தகையோர் எவராயினும் எதுவித பாரபட்சமுமின்றி சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நில அளவையாளர்களைக் கொண்டு அரச காணிகளை அளக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
தனியார் துறை நில அளவையாளர்களை இதற்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி மாகாணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மாகாண செயலாளர் தாம்புகல ஜனாதிபதிக்கு விளக்கினார். அதன் போது அரச காணிகளை பலாத்காரமாக அபகரித்து வருவது தொடர்பிலும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரைகளை விடுத்தார். நேற்றைய இந்நிகழ்வில் குருநாகல், புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தத்தமது மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக