12 அக்டோபர், 2010

‘ஒரு வருடத்திற்கு முன்னர் ஆயிரக்கணக்கானவர்களைப்


போலவா இந்த மக்கள் இருக்கிறார்கள்? அல்லது, பெரிய மரணப் பொறிக்குள் சிக்கித்தவித்தவர்களைப் போலவா இவர்கள் தெரிகிறார்கள்? என்று ஆச்சரியப்படுகிறார் வெளிநாடொன்றில் இருந்து வன்னிக்கு வந்திருக்கும் நண்பர் ஒருவர். அந்தளவுக்கு வன்னியில் மக்களின் வாழ்க்கை வேகமடைந்திருக்கிறது. வன்னி நிலைமைகளில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் என்ற மாதிரி வளர்ச்சியும் ஏற்பட்டுக் கொண்டேபோகிறது. இந்த வளர்ச்சி அந்தச் சூழல் மாற்றங்களுக்குட்படுத்தி வருகிறது.

மக்கள் எப்போதும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் சனப்புழக்கம் அதிகரித்துள்ளது. கோவில்களில் வழிபாடுகள் நடப்பதன் சாட்சியமாக ஒலிபெருக்கிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைகளும், தெருக்களும், வளவுகளும் புதுப்பொலிவடையத் தொடங்கியுள்ளன. பாடசாலைகளில் இப்போது மாணவர்களின் வரவு முன்னரைவிடவும் அதிகரித்துள்ளதாக அதிபர்கள் சொல்கிறார்கள். சந்தைகளுக்கு உள்ளுர்ப்பொருட்களே வரத்தொடங்கியிருக்கின்றன.

எல்லா வயல்களும் விதைப்பதற்காக உழப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழிலுக்கு போகிறார்கள். இளைய பெண்களைத் தவிர இப்போது யாருக்கும் வன்னியில் வேலை இல்லை என்றில்லை. எந்த வேலைக்கும் ஆட்களைத் தேடுவதென்பது இப்போது வன்னியில் கடினமான காரியம்.

கட்டுமானப் பணிகள், வளவு வேலைகள் புதிய தொழில் முயற்சிகள், தொண்டர் அமைப்புக்களின் பணிகள், போக்குவரத்துச் சேவைகள், கல்வி முற்சிகள், தையல், வெல்டிங் என்று பல வேலை வாய்ப்புக்கள் வன்னியில் உருவாகியிருக்கின்றன.

ஏல்லாவற்றையும் புதிதாகக் கட்டவேண்டுமல்லவா! ஏல்லாவற்றையும்! தொடக்கத்திலிருந்தே ஒவ்வொன்றையும் ஆரம்பிக்கவேண்டியிருப்பதால் ஏராளமான வேலைகள், பணிகள், பகீரத முயற்சிகள் என உருவாகியிருக்கின்றன.

மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இழந்தவைகளைப் பெறுவதற்காக.. தேவையானவற்றைப் புதிதாக உருவாக்குவதற்காக… இழந்த எல்லாவற்றையும் பெறமுடியாத போதும் மிஞ்சியிருக்கும் வாழ்க்கையை வாழவேண்டுமே! அதற்காக… இப்படி அவர்கள் எல்லாவற்றுக்காகவும் ஓடுகிறார்கள். வீட்டைக் கட்டுவதற்காக, வேலிகளை அடைப்பதற்காக, புதிதாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, அல்லது கிடைத்த தொழிலை வடிவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, பிள்ளைகளைப் படிப்பிப்பதற்காக என்று அவர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த ஓட்டம் அவர்கள் முன்னர் அகதிகளாக ஓடிய ஓட்டம் அல்ல. இது அகதிகளாக ஓடிய ஓட்டம் அல்ல இது அகதி நிலையிலிருந்து மீள்வதற்கான ஓட்டம். மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஓட்டம் புதிதாக வாழ வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஓட்டம்.

இதுநாள் வரையிலும் ஓடியோடிக் களைத்தவர்கள். பெரும் பாரங்களைச் சுமந்தவர்கள். நெருக்கடி நிலைகளிலேயே வாழ்ந்தவர்கள், போரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தவர்கள். இப்போது புதிதாக வாழத் துடிக்கிறார்கள். அதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்க்கும்போது மனதில் துக்கம் கவிகிறது. ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையிலான இழப்புக்கள் இருக்கும் போதும் அவற்றையும் தாங்கிக் கொண்டு ஓடுகிறார்கள். தங்களுக்கு முன்னேயிருக்கும் சவால்களை வெல்வதற்காக… அந்தச் சவால்களை வென்று வாழவேண்டும் என்பதற்காக ஓடுகிறார்கள். இவ்வாறு வன்னிச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்பது உண்மைதான். ஆனால் அது எந்த அளவுக்கு என்பதும் கேள்விக்குரியது. அதாவது என்னதான் முயன்றாலும் இந்த மக்களால் ஒரு எல்லைக்கு மேலே நகரமுடியவில்லை.

குறிப்பாக பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றால் பாடசாலையில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலை, புதிதாக தொழில்களைச் செய்வதற்கு பலருக்கும் மின்சாரமில்லாத நிலை, வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் எண்பது வீதமானவர்கள் எதிர்வரும் மாரி மழைக்கு அந்தரிக்கத்தான் போகிறார்கள்.

இந்த மாதிரிப் பிரச்சினைகள் மக்களைத் தொடர்ந்தும் வாட்டுகின்றன. இன்னும் இவர்களுடைய பாரச் சிலுவைகளும் துயரச் சிலுவைகளும் அகன்று விடவில்லை. இன்னும் இவர்களுடைய நெருக்கடிகள் நீங்கிவிடவில்லை. அவை ஏதோ வகைகளில் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

இதற்குள் நிர்வாக ரீதியான இழுபறிகள், நடவடிக்கைத் தாமதங்கள் என்பவற்றாலும் அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளாலும் பொருத்தமற்ற நடவடிக்கைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புஙீறப்பு – இறப்பு பதிவுகள், வங்கிகளின் கடன் நடவடிக்கைகள், காணி வழங்கல், அல்லது காணிகளுக்கான உறுதிப் பத்திரம் வழங்குதல், கட்டுமானப்பணிகளுக்கான மூலப் பொருட்களை பெறுவதில் இருக்கும் ஒழுங்கீனங்கள் போன்றவை மக்களை மேலும் அழைக்கழிக்கின்றன.

இதைப்போல, தடுப்பு முகாம்களிலிருந்து இன்னும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விடுவிக்கப்படாமை பல குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்வைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனாலும் வன்னியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியைக் காட்டக்கூடியனவாகவே இருக்கின்றன.. கடந்த ஜனவரியில் இருந்ததற்கும் இப்பொழுது இருக்கும் நிலைமைக்கும் இடையில் நிறைய மாற்றங்களும் நிறைய வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.

இதுவொரு சந்தோசம் தரக்கூடிய நிலைமைதான். போரின் காயங்களை ஆற்றுவதற்கு இந்த நிலை மாற்றம் அவசியம். இதையே உளநல மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். மக்கள் புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தால்தான் அவர்களுடைய மன வடுக்களை நீக்க முடியும். அவர்கள் தங்களுடைய வாழ்வில் கண்டு சந்தித்த ஆழமான மனக்காயங்களை ஆற்றுவதற்கு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை அவசியம் என்று இந்த உளநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தவிர பொதுவாகவே மக்களின் இயல்பென்பது துயரங்களைக் கடப்பதற்கு முயற்சிப்பதுதான் எந்த மனிதரும் வாழவே அவாவுறுகின்றனர். துக்கத்தைக் கொண்டாடுவதையும் விட ஒரு கணநேர மகிழ்ச்சியை அனுபவிக்கவே ஒவ்வொரு மனித மனமும் துடிக்கிறது.

மகிழ்ச்சியைப் பெறுவதற்காகவே மனிதர்கள் ஓடிக்கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பதாக இருக்கட்டும், தொழில் செய்வது, சம்பாதிப்பது, வீட்டைக் கட்டுவது பொருட்களை வாங்குவது எனச் சகலதும் வாழ்வதற்காகவே அதிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே

எவரும் துக்கத்தை விரும்பவில்லை. எவரும் வீணே செத்து மடியவும் விரும்ப வில்லை. எவரும் அவலத்தை ஏற்கத்தயாராகவும் இல்லை. எல்லோரும் அவலங்களைக் கடக்கவே விரும்புகின்றனர். தங்களுடைய கடந்த காலத்தின் துயர வெளிகளிலிருந்து மீண்டு விடவே அவர்கள் விரும்புகின்றனர். அந்த நெருப்புக் காலங்களின் அவலங்களை விட்டு வெளியேறுவதற்காகவே அவர்கள் துடிக்கிறார்கள்.

அதற்காகவே அவர்கள் எந்த இடர்களுக்குள்ளாலும் தங்களின் வாழ்வைத்துளிர்க்க வைக்க முயல்கின்றனர். கல்லின் இடுக்குகளுக்குள்ளிருந்தும் வேர் விட முயலும் ஆலமரத்தைப்போல, மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளிருந்தும் அவர்கள் தங்களின் வாழ்வின் வேரைப் பாய்ச்ச முயல்கிறார்கள்.

இப்படிச் சொல்வதன் மூலம் வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏதோ இயல்புநிலை வந்து விட்டதாகவும் மக்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாகவும் யாருமே கருதவேண்டியதில்லை. இந்த மாவட்டங்களில் ஏராளமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவேண்டியுள்ளன.

மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் இன்னும் அப்படியேதானிருக்கின்றன. ஆனால் நிலைமைகளில் முன்னேற்றமும் ஒரு குறிப்பிட்டளவுக்கான வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் இந்த மக்களே சிறுகச் சிறுக ஏற்படுத்தி வருகிறார்கள். எறும்புகளைப் போல, சின்னஞ்சின்னனாக ஒவ்வொன்றையும் மிகக் கடினப்பட்டு இவர்கள் உருவாக்கியும் கட்டியெழுப்பியும் சேமித்தும் வருகிறார்கள்.

இதைத்தான் இப்போது பலரும் புரிந்து கொள்ள வேண்டும். மிகக் கொடிய போரிலிருந்து தப்பிய மக்களை உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஆறுதற்படுத்தவில்லை. என்பது மிகக் கசப்பான உண்மையாகும். அதாவது இந்த மக்களுக்காக அனுதாபப் பட்டிருக்கிறார்கள். இந்த மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது அதற்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். மீள் குடியேற்றத்தின் போதாமைகளைப் பற்றி கண்டனந் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த காயங்கள் நிறைந்த மனிதர்களுக்கு உதவி அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதில் போதிய பங்களிப்பை உலகத் தமிழர்கள் செய்யத்தவறி விட்டனர். இது கசப்பான ஒரு நிலைமையாகும். அதிலும் புலம் பெயர் தமிழர்கள் இதிலிருந்து விலகி நிற்பது வேதனைக்குரியதே.

ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் (ஆனால் இந்த எண்ணிக்கை குறைவானது) தாங்களாகவே முயற்சித்துச் சில வழிகளைக் கண்டு பிடித்து உதவி வருகிறார்கள். இந்த உதவியும் அதன் வீச்சும் மிகவும் மெல்லியதே. மற்றும்படி ஏனையோர் எல்லாம் அரசாங்கம் உதவ அனுமதிக்கவில்லை என்ற ஒற்றைச் சொல்லில் பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கின்றனர். அல்லது தாங்கள் உதவினால் அந்த உதவியில் அரசாங்கம் அரசியல் ஆதாயத்தைப் பெற்றுவிடும் என்ற காரணத்தைக் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் பாதிப்புக்களைச் சந்தித்தது விடுதலைப் போராட்டத்தின் பேரால், சந்தித்த பாதிப்போ வார்;த்தைகளில் அளவிடவும் விளக்கவும் முடியாத அளவுக்கானது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இருந்தும் இதைத் தீர்க்க முயலாது. காரணங்களை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது மாபெரும் அரசியற் பலவீனமன்றி வேறென்ன? இது ஒரு வகையில் குற்றமும் கூட உதவக்கூடிய மக்களைத் திசை திருப்பும் தவறான செயல்.

சொந்த மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வலுவான சர்வதேச நியமனங்களோடு தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. என்பது எவ்வளவு கசப்பான உண்மை? அதைப்போல அரசாங்கத்தைக் கடந்தே அரசாங்கத்தைப் பயன்படுத்தியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியவில்லை என்பது தமிழர்களின் சாதுரியக் குறைபாடன்றி வேறென்ன? உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவக்கூடிய மனப்பாங்கோடும் பொருளாதார அறிவியல் வளங்களோடும் ஈழத்தமிழர்களே உலகெங்கும் உள்ளனர். ஆனால், அவர்களை அவர்களுடைய மனங்களும் அவர்களை வழிப்படுத்தும் அமைப்புகளுமே தடுத்தாள்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் மிகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அல்லது அவர்கள் தாங்களாகவே கடினங்களின் மத்தியில் தங்களைத் மீளத் தூக்கி நிறுத்த வேண்டியுள்ளது. அப்படித்தான் அவர்கள் தங்களைத் தாங்களாகவே நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். உதவக்கூடியவர்களோ ஆயிரமாயிரம் சாட்டுகளையும் காரணங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை நிச்சயமாக புலம் பெயர்ந்த மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். முன்னர் புலம் பெயர் மக்களின் பங்களிப்புகள் விடுதலைப்புலிகளுக்கு கணிசமான அளவுக்குக் கிடைத்தன அதனால் அவர்கள் புலிகளிடத்தில் கணிசனமான அளவுக்குச் செல்வாக்கைச் செலுத்தினர். போரின் இறுதிவரையில் இந்தச் செல்வாக்கு இருந்தது.

ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. புலம் பெயர்ந்தோரின் அரசியல் மற்றும் உதவிப் பணிகளின் போக்கு மாறித் திசைதிரும்பியுள்ளது. அது நடைமுறையில் இடைவெளிகளை அதிகரிப்பதாகவே அமைந்து செல்கிறது.

அதனால் போதிய உதவிகளும் ஆதரவும் இல்லாத நிலையில் தங்களின் வாழ்வைத் தாங்களாகவே இந்த வன்னி எறும்பு – மனிதர்கள் கண்டடைந்தும் கட்டியெழுப்பியும் வருகின்றனர். அந்தப் பரபரப்பே இப்போதைய வன்னி – எறும்பு மனிதர்கள் எல்லோருடைய கால்களுக்குள்ளும் நசிபடுகிறார்கள். நசிபட்டுத்தான் ஆகவும் வேணும் படையினர், அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிங்கள, முஸ்லிம் வியாபாரிகள், தமிழ் அரசியல்வாதிகள் எனப் பலருடைய கால்களுக்குள்ளும் நசிபட்டே எழுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக