12 அக்டோபர், 2010

அரசியல் தீர்வினை எட்டுவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும்:மாவை எம்.பி

அரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டுவதற்கு எமது அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும். நாம் சிறு சிறு கட்சிகளாக பிளவுகளாக பிரிந்து நிற்காமல் எவ்வளவுக்கு ஒன்றாக நிற்கும் பலத்தை இணைத்து உருவாக்க முடியுமோ அதற்காக மக்களனைவரும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், பிரதேசக் கிளைகளின் உறுப்பினர்கள, ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மாவட்ட மட்ட கூட்டம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு பக்கம் தாவியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவரை கட்சியை விட்டும் நீக்க வேண்டுமென கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் முன் வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் பொடியப்பு பியசேன பாராளுமன்றப் பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரவும் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இன்றைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு தூரம் மக்களின் ஒற்றுமையைப் பேண முடியுமோ அதைப் பேண வேண்டும். வடக்கு கிழக்கு பிரிந்திருக்கின்றது என அரசு தம்பட்டமடிப்பது கடந்த பொதுத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதேவேளை அவர்களால் மக்களைப் பிரிக்க முடியவில்லை. மக்கள் நன்றாகத்தானிருக்கிறார்களென்பது கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பல வழிகளுண்டு. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும்.

இதில் முக்கியமான அங்கம் நாம் ஒன்றுபட்டிருப்பது மட்டுமல்ல, கிழக்கில் இன்னுமொரு முக்கியமான அங்கமாகவுள்ள முஸ்லிம் மக்களுடனும் நாம் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.முஸ்லிம் மக்களுக்கும் ஓர் அரசியல் தீர்வு அவசியம் தேவை. இதையும் நாம் ஏற்று அவர்களுடன் பேசி இணக்கம் கண்டு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும் நமக்கிருக்கும்போது தான் நாம் இலக்கை நோக்கிச் செல்லும் பயணம் இலகுவாகவிருக்கும். நம் இலட்சியத்தை அடையலாம்.

அடிப்படையை விட்டுக் கொடுக்க முடியாது

அதாவது சுய நிர்ணய அடிப்படையில் இணைந்த தாயகத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்க முடியாது. இந்திய அரசின் பிரதமரும் நீங்கள் உங்களது அடிப்படைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காமல் அரசுடன் பேச வேண்டுமென்றே எம்மிடம் கூறியுள்ளார். நம் மக்கள்அளித்த தீர்ப்பின் பின்னர் இதைக் கூறி நாங்கள் உங்களுடன் இருக்கிறோமெனவும் உறுதியளித்துள்ளார். இது நமக்குப் பலமான வார்த்தைகளாகும்.

முஸ்லிம் மக்களுடன் முரண்பாடுகள் இல்லாமலிருக்க முடியாது, ஆனால் அவர்களு இருக்கும் பிரச்சினைகளை நாமுணர்ந்தும் நமக்கிருக்கும் பிரச்சினைகளை அவர்கள் உணர்ந்தும் முரண்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.இத்தகைய மன உணர்வுகளை நாம் ஒன்றுபடுத்தினால் தான் பேரினவாதத்திற்கு இடம் கொடுக்காமல் நாம் நம் இலக்கை நோக்கி முன்னேற முடியும்.

இது முஸ்லிம் மக்களுக்கும் அவசியமாகவேயுள்ளது. அவர்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். பேரினவாதம் எவ்வளவு தூரம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றதென்பதை அவர்கள் மனம் திறந்து எம்மிடம் கூறுகின்றனர். அவர்களுடைய தேவைகளை நாமறிந்து நாங்கள் தான் எமது இலக்கில் அவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டியதாகவும் நாமும் அவர்களும் இணைந்து அந்த அடிப்படையில் தமிழர்களுடைய எதிர்கால அரசியலில் ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கு அதிக பொறுப்புள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமிழரசுக் கட்சியினர் தான் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை

இங்கு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதில் குறிப்பாக அரசு பக்கம் தாவியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தொடர்பில் கட்சியென்ற ரீதியில் அவருக்கு எதிராக கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான அறிவித்தல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட முறைப்படி படிமுறையாக இதனை மேற்கொள்வோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது அரை குறை உயிர்களாக கருகிய உடல்களோடு பல்வேறு உறவுகளைப் பலி கொடுத்து விட்டு முகாமுக்குள் அடைபட்டிருந்த மூன்று லட்சம் மக்களும் தனக்கே வாக்களிப்பரென ஜனாதிபதி மனப்பால் குடித்திருந்தார். ஆனால் அந்த மக்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கினரென்பதை உலகே அறியும்.

அந்த மக்கள் இக்கட்டான நிலையிலும் ஜனாதிபதிக்கு எதிராகவே வாக்களித்தனர். அத்தனை கொடூரமான பேரவலத்தைச் சந்தித்து அரை குறை ரீதியாகவிருந்த மக்களுக்கிருந்த இந்த தத்துவம் உள்ளுணர்வு தமிழ்ப் பிரதேசங்களில் சுகமாக வாழ்ந்தவர்களுக்கு வரவில்லையென்பது கவலையளிப்பதாகும். அதேபோல் நீங்களும் வாக்களித்தவர்களும் பல நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் நம் மக்கள் வடக்கு கிழக்கில் இவ்வளவு மக்களும் வாக்களித்ததால் தான் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகக் கூடியதாகவிருந்தது.அம்பாறை மாவட்ட மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அதைவிடப் பெரிய பிரச்சினைகளை இன்று யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

குறிப்பாக ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் புகையிரத நிலையத்தில் வந்து குவிந்து தங்களுக்கு வீடு வேண்டும், காணி வேண்டுமெனச் சண்டை பிடிக்குமளவுக்கு நிலை மாறியுள்ளது. இது மட்டுமின்றி எமது மக்கள் அங்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்த பிரதேசங்களில் புதிய குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல் நம் மக்களின் நிலங்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஏக்கர்கள் எடுக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வா 1949 இல் கிழக்கு மக்களுக்கு வடக்கு மக்கள் பலத்தைக் கொடுக்க வேண்டுமெனச் சொன்னார்.

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து விட்டோமெனச் சொன்ன பிறகும், பிள்ளையானின் தலைமையில் கிழக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பிறகும் கருணா அம்மான் அமைச்சராகப் பவனி வந்த போதிலும் கிழக்கு மாகாண மக்கள், குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் தடம்புரளாது உறுதியுடன் தமிழ்த் தேசியத்துடன் நாம் வடக்கு கிழக்கு மக்கள், தந்தை செல்வாவிற்குப் பின்னால் அணி திரண்ட சமுதாயம் என்பதை நிரூபித்துள்ளனர்.கொள்கைக்காக இலட்சியத்திற்காகவே நீங்கள் வாக்களித்தீர்களே தவிர பியசேனவுக்காக அல்ல என்பதே நிரூபணமாகும்.

பியசேன அரசு பக்கம் தாவியது ஒரு பொருட்டல்ல, அவர் முளைவிடும் நெல்லாக இல்லை, பதராகப் போய்விட்டார். ஆனால் இங்குள்ள மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் மேலும் எழுச்சி பெற்றுள்ளனர் என்பதை நாம் உணர்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக