12 அக்டோபர், 2010

செங்கலடியில் 490 மனுக்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

செங்கலடி பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சாட்சியமளிப்பில் காணாமல் போன, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் கொலை செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினரில் 490 பேர் தங்களுடைய மனுக்களை கையளித்தனர்.இதேவேளை ஆறு பேர் மூடிய அறைக்குள் சுமார் இரண்டரை மணி நேரம் தனித்தனியாக சாட்சியமளித்தனர். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பிலும் இரகசியமாக சாட்சியமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழு மூன்றாவது நாளாகவும் சாட்சிகளை செங்கலடி பிரதேச செயலகத்தில் வைத்து பதிவு செய்து கொண்டது.

சாட்சியமளிப்பதற்கு செங்கலடி, ஏறாவூர், கோரளைப்பற்று, (கிரான்) ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் சாட்சியமளித்தனர். கடத்தல், காணாமல்போதல் மட்டுமன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், விசேடமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இதுவரையில் காணவே கிடைக்காதவர்கள் தொடர்பிலான விபரங்களையும் சாட்சியளிக்க வந்தவர்கள் விபரித்தனர்.

யுத்த காலத்திலும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் உறவினர்கள் கடத்தப்பட்டதாக சாட்சியமளித்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஆணைக்குழு முன்னிலையில் மிக இரகசியமாக சாட்சியமளித்தனர்.

இரண்டரை மணி நேரத்திற்குள் அறுவரின் சாட்சியங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் 2.30 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை நிறைவு பெற்றது. ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் களுவாஞ்சிக்குடியில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெறவிருந்த சாட்சிகளை பதிவு செய்து கொள்வது இரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக