12 அக்டோபர், 2010

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து?


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. ஏறக்குறைய 19 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்தைப் பிடிக்க உள்ளது. இதற்கான தேர்தல் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற உள்ளது.

÷ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக இடம்பெறுவதற்கு போட்டியிட்ட கஜகஸ்தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதனால் இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

÷ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஒரே ஒரு நாடு மட்டுமே போட்டியிடுவதால் அந்தந்த நாடுகள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மேற்கு ஐரோப்பாவுக்கு 2 பிரதிநிதிகளுக்கான இடம் உள்ளது. இந்த இரு இடங்களுக்கு கனடா, ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய 3 நாடுகள் போட்டியிடுகின்றன.

÷ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவின் இடம் உறுதியாகிவிட்டது. இதனால் மூன்று வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற உள்ளன. வரும் ஆண்டுகளில் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் மிக முக்கிய பங்காற்றும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

÷ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். இதன்படி இந்தியாவுக்கு 128 நாடுகளின் ஆதரவு தேவை.

÷கடைசியாக 1992-ம் ஆண்டு பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக உள்ள ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவற்றின் உறுப்பினர் காலம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி நடைபெறும் தேர்தலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் போட்டியிடுகின்றன.

÷ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

÷ஜெர்மனி வெற்றி பெற்றால் ஜி-4 நாடுகள் (இந்தியா,பிரேஸில், ஜப்பான், ஜெர்மனி) அனைத்தும் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற்றுவிட்டன என்ற பெருமை கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொடங்கும்.

÷கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

÷ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும்போது, நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார். இது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

÷அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது இந்த விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக