19 மே, 2010

அமெரிக்காவில் நடந்தது நாடு கடந்த தமிழ்ஈழ அரசு பிரதிநிதிகள் முதல் கூட்டம்:

தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் ஈழத்தை உருவாக்கும் திட்டத்துடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

மொத்தம் 115 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இதுவரை 87 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் முதல் கூட்டம் நேற்று அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் தொடங்கியது. நாளை வரை கூட்டம் தொடர்ந்து நடக்கிறது.

முதல் நாள் கூட்டத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஒருங்கிணைப்பாளர் ருத்திர குமாரன் பேசியதாவது:-

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட ஜனநாயக குரல்களும் கோரிக்கைகளும் ராணுவ அடக்கு முறையின் கீழும், சட்டத்தின் இரும்பு கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளை கூட ஒடுக்கப்பட்ட நிலையில், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக 10 லட்சம் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்து உள்ளோம்.

ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிக முக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவு கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்பினுள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக அப்பாவித் தமிழர்கள் கொடூரமான மரணப் பொறிக்குள் தள்ளப்பட்டனர்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களைக் காவு கொண்டும், பலபத்தாயிரம் மக்களை குற்றுயிராக காயப்படுத்தியும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.

ஒரு இனத்தின் அபிலா சையினையோ அல்லது உரிமைக்குரலினையோவன் முறை கொண்டோ அதிகாரத்தின் பலம் கொண்டோ அடக்கி விட முடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும்.

சிங்கள மக்கட்தொகைப் பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஓரின பெரும்பான்மை கொண்ட ஆட்சி அதிகாரத்தின் பலத்தினைக் கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியல் அமைப்பினையும் சட்டங்களையும், நிர்வாக விதிகளையும் உருவாக்கி உள்ளீர்கள்.

இது சக இனங்கள் தங்கள் உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமல் செய்துள்ளது. ராணுவ பலத்தினால், நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்க நிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.

வெற்றி மமதை காரணமாக தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரங்களை உங்களினால் உணர முடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களையும், வளங்களையும் கையகப்படுத்துவதிலும் அவர்களை துயர நிலைக்கு தள்ளுவதிலும் துரிதமான செயல்படுகிறீர்கள்.

தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்து வரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.

தாயக தமிழ் ஈழமக்களே இலங்கையில் இறைமையுடனும் தன்னாட்சி உரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசிய விடுதலைப்போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசிய தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

இலங்கையில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விஷயங்களுக்காக பலம் வாய்ந்த புலம் பெயர் சமூகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.

சம காலத்தில் உங் களின் துயரங்களின் சுமையை குறைப்பதற்கும் வாழ்க்கையை மீளக்கட்டி யெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும், உங்கள் மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல, உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம். நாங்களும், நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேசிய மக்களாகிய நாம் இருக்கிறோம். தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அர சாங்கத்தின் வழியாக நாம் வலுச்சேர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக