19 மே, 2010

ஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட அவசர கூட்டம் வெள்ள நிவாரணத்துக்காக ரூ.18 மில்லியன் ஒதுக்கீடு


2,77,000 பேர் பாதிப்பு; களனி, நில்வளா, களு கங்கைகளில் நீர்மட்டம் உயர்வு
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித கதியில் தேவையான நிவாரணங்களை வழங்கவும், வெள்ள நீர் கிரமமாக வடிந்து செல்வதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு, மாகாண சபை நிறுவனங்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து துரித செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18) மாலை அலரி மாளிகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவுள்ள நிவாரணம் தொடர்பாக இடர்முகாமைத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் மாகாணத்தில் 340 மி. மீட்டர் மழை பெய்துள்ளதுடன் 65 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக 180 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உலக உணவு அமைப்புடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் எந்தவொரு தாழ் நிலத்தையும் நிரப்புவதில்லை என்றும் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை தீர்மானத்துக்கு அனைத்து மாகாண சபை நிறுவனங்களும் கட்டுப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று வெள்ளம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் பங்குகொள்ள பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகள் இருப்பின் அது தொடர்பான துரித அறிக்கையொன்றை தமக்கு பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்காலத்தில் குறிப்பாக நகரை அண்டிய நிர்மாணங்களுக்காக முறையான திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பாதுகாப்பு செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் இலங்கையின் பழைய நீர்ப்பாசன வரைபடத்துக்கு ஏற்ப தூர்ந்து போன வாவிகளை இனங்கண்டு மீண்டும் அவற்றை திருத்துவதன் துரித அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிரிசேன, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த், பாட்டலி சம்பிக ரணவக, காமினி லொக்குகே, ஆகியோருடன் ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொழும்பு மாவட்டத்தில் 21,404 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 5082 குடும்பங்களும் காலி மாவட்டத்தில் 1,300 குடும்பங்களும், குருணாகல் மாவட்டத்தில் 44 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 140 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. இதேவேளை களனிகங்கையின் நீர் மட்டம் 4 அடி 4 அங்குலமாக உயர்வடைந்து ள்ளதுடன் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். களுகங்கையின் நீர்மட்டம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. குக்குலே கங்க நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த பகுதிகளிலுள்ளவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வளா இலங்கையில் நீர்மட்டம் 6 அடி ஒரு அங்குலமாக உயர்வடைந்துள்ளது. ஜின்கங்கையின் தாழ்ந்த நிலப் பகுதியான பத்தேகம பகுதியில் நீர்மட்டம் 1 அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கட்டுநாயக்கா முதல் கொழும்பு வரையிலான பாதையிலுள்ள தண்டுகம ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக