தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் கண்காணித்து தண்டனை வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் மாநாடு ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மாநாடு நடைபெற்றதாக நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் ஆரம்பக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக உருத்திரகுமாரன் மின் அஞ்சல் மூலம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் கிடைக்கப் பெறும் வரையில் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. ஐக்கியமானதும், ஜனநாயக ரீதியானதுமான இலங்கையின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக