19 மே, 2010

அமெரிக்க ராணுவ பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 2 பேர் கைது


வாஷிங்டன் : அமெரிக்க ஏற்றுமதிச் சட்டத்தை மீறி, சீன ராணுவத்துக்கு, அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மாசாசூயட்ஸ் நகரில், சிட்ரோன் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஜென் ஜோ வூ மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் யூபெங்க் வெய் ஆகிய இரண்டு பேரும், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் ராணுவ ராடார் கருவிகள், தீயணைப்புக் கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், செயற்கைக் கோள் தொடர்புக்கான கருவிகள், ஜி.பி.எஸ்., வசதியுள்ள கருவிகள் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை, சட்டவிரோதமாக, சிட்ரோன் நிறுவனம் மூலம், அதன் உரிமையாளர் ஜென், சீனாவிலுள்ள அந்நிறுவனத்தின் கிளை நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பொருட்கள் சீன ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் 2004 முதல் 2007 வரை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் வெய், அமெரிக்காவில் குடியிருப்பவர். ஆனால் இவர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகப் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.அமெரிக்கா, 1990 முதல் சீனாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக