24 ஏப்ரல், 2010

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமான பாராளுமன்றம்

தமிழ் கூட்டமைப்பின் அணுகுமுறைக்கு சு.க சிரேஷ்ட தலைவர்கள் பாராட்டு
மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஸ்திரமான ஒரு பாராளுமன்றம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.

1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்திரமான அரசாங்கத்தை நடத்தக் கூடிய அரசியல் சூழல் இருக்கவில்லை என்று கூறிய அவர்கள், இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கென சிறந்ததோர் பாராளுமன்றம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மாற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை நல்லதோர் அணுகுமுறையாகுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சம்பந்தன் ஆற்றிய உரை அவர்களின் அரசியல் செல்வழியில் புதிய அணுகுமுறையைப் புலப்படுத்துவதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார் த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சந்திப் புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐ.ம.சு. முன்னணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பூட்டானில் நடைபெறவுள்ள 16ஆவது ‘சார்க்’ உச்சிநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் கூறினார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச்சந்திப்புக்குப் பின்னர் இலங்கையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவாகியிருப்பது ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகுமென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

“1931ஆம் ஆண்டின் முதலாவது சட்ட சபையில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் துரைசாமி சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் 1965 முதல் 1970 ஆண்டு வரை உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்த மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவிருந்தார். அதற்குப் பின் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரகுமார் முருகேசு குழுக்களின் பிரதித் தலைவர் பதிவிக்குத் தெரிவாகியுள்ளார். இது ஒரு நாள் அரசியல் மாற்றம்” என்றும் அமைச்சர் விபரித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளமை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்குமென்றும் முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோரே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக