24 ஏப்ரல், 2010

13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு... தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனும் பேச டக்ளஸ் முடிவு





அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக