இலங்கை பாராளுமன்ற முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள, முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
ராஜபக்சேக்கு மெஜாரிட்டி
இலங்கை பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 60 எம்.பி.க்களும், முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 7 எம்.பி.க்களும் உள்ளனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ராஜபக்சேயின் தம்பி பாசில், ராஜபக்சேயின் மகன் நமால் உள்பட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சபாநாயகர் தேர்வு
புதிய பிரதமராக முன்னாள் துறைமுக மந்திரி டி.எம்.ஜெய ரத்னேயும், ராஜபக்சேயின் சகோதரர் சமால் ராஜபக்சே சபாநாயகராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பிரியங்கரா ஜெயரத்னே துணை சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ராஜ துரோக குற்றம் உள்பட பல்வேறு ராணுவ குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஜெயிலில் இருந்த முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அவர் பாராளுமன்றத்தில் பதவி ஏற்கவும், பேசவும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதன்படி அவர் நேற்றைய கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்ப்பேன்
குர்தா-வேட்டி அணிந்திருந்த பொன்சேகா பேசுகையில், "இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. என்னை விதிகளுக்கு மாறாக கைது செய்து ஜெயிலில் அடைத்து இருக்கிறார்கள். ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பேன்'' என்று குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேசுகையில், ``இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் அவதிகளை போக்கும் எந்த ஒரு அரசின் நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுப்போம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக