24 ஏப்ரல், 2010

ஐ.தே.க தலைமை மீது சிறுபான்மையினர் அதிருப்தி மனோ, திகா வெளியேற்றம்: காதர் இராஜஙீனாமா






ஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் சில முன்னணியின் தலைமையுடன் அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன.

தேசியப் பட்டியல் பிரச்சினை காரணமாக ஜனநாயக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் தனித்துவமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான, ஜனநாயக மக்கள் முன்னணி பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் தனித்துவமாகச் செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் “வார மஞ்சரி”க்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பட்டியலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுள் வெற்றி பெற்ற பிரபா கணேசன் பாராளுமன்றத்தில் தனித்து இயங்குவார். அதேபோன்று மேல் மாகாண சபையில் உள்ள இரண்டு உறுப்பினர்களும், மத்திய மாகாண சபையில் உள்ள ஓர் உறுப்பினரும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாக இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பட்டியலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ள மனோ கணேசனைப் பாராளுமன்றத்திற்கு உள்வாங்க தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லை. ஐ. தே. க. தலைமைப் பீடம் வாக்குறுதியளித்திருந்தது இறுதி நேரத்தில் ஏமாற்றிவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால், ஐ. தே. மு. உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே தனித்துவமாக இயங்க ஜனநாயக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண சபையில் உறுப்பினராக விருந்த பிரபா கணேசன் பாராளுமன்றம் செல்வதால், அவரின் இடத்திற்கு ஐ. தே. க. உறுப்பினரே தெரிவாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியுடனான பிரச்சினை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனோ கணேசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாக மனோ கணேசன் “வாரமஞ்சரி”க்குத் தெரிவித்தார். அவர் எம். பி. பதவியை இழந்திருந்தாலும் அவருக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தொழிலாளர் தேசிய முன்னணியும் தேசியப் பட்டியல் பிரச்சினை காரணமாகத் தனித்து இயங்க தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் தலைவர் பீ. திகாம்பரம் நுவரெலியா மாவட்டத்தில் ஐ. தே. மு. வில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்தக் கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டதாக ஐ. தே. மு. மீது திகாம்பரம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

அதேநேரம், ஐ. தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களை ஏமாற்றிவிட்டாரெனவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது இவ்விதமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரான ஏ. ஆர். எம். அப்துல் காதர் முக்கிய பதவிகளை இராஜனாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் அரசாங்கத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக