ஆட்கடத்தலை தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய நுழைவாயில் தளங்களில் செயலணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலகு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள செயலணி அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படும் எனத் தெரிய வருகிறது. நீதி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சட்ட அமுலாக்க அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மற்றும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு ஆகிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த செயலணிப்படை செயற்படும்.
அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் எல்லைப் பாதுகாப்பு அலகுகள் அமைக் கப்படவுள்ளன.
இந்த நுழைவாயில்களுக்கூடாக வருவோர் மற்றும் வெளிச் செல்வோரில் ஆட்கடத்தலினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளோரை இனங்காண்பதற்கு இந்த அலகு பயன்படுத்தப்படும்.
அதேவேளை ஆட்கடத்தில் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் செயலணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
இந்நிலையில் இலங்கை நீதிமன்ற மொன்றில் முதல் முறையாக ஆட்கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இலங்கை குற்றவியல் கோவையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தையடுத்து ஆட்கடத்தல் குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இந்த தண்டனை ஏனைய பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.
ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் நாடுகள் மூன்று வெவ்வேறு வரிசைகளில் அவற்றின் பாதிப்பு இனங்காணப்படும் அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பட்டியலில் இலங்கை இரண் டாவது வரிசையில் இருப்பதையடுத்தே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அந்த அறிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களை பணத்துக்காக வெளிநாடுகளுக்கு கடத்த உதவுதல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாலியல் நடவடிக்கை வியாபாரம் ஆகியவை இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட் டுள்ளது. இவ்வாறு ஆட்கடத்தல் இடம் பெறுவதற்கு பின்வரும் சாத்தியக்கூறுகளே காரணம். தொழில்களுக்காக குடியேறுவோர், வெவ்வேறு நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்த பின்னர் விசா வழங்கும் நடைமுறைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து மையமாக அது அமைந்துள்ளமை என்பனவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக