27 ஏப்ரல், 2010

30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு

முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பு முதல்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

எனினும் அது நாடு முழுவதும் நடத்தப்படவில்லை. அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனதையிட்டே நாடு முழுவதிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில் 30வருடங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடத்தப்படும் முதலாவது கணக்கெடுப்பு இதுவாகும். இந்நிலையில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை என்பவற்றைச் சேகரிப்பதுடன் தொடர்புடையதான ஆரம்பப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவையான வரைபடத்தையும் வீட்டு விபரங்களையும் சேகரித்து வருவதுடன் கணக்கெடுப்பு தொடர்பிலான அறிவுரை செயல்திட்டம் 11 மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளதுடன் குறுகிய காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கணக்கெடுப்பைச் சரியாக மேற்கொள்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை உள்ளூர் பணியாளர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சனத்தொகைக் கணக்கெடுப்புத் தொடர்பில் புதிய மென்பொருள் ஒன்றை திணைக்களம் அண்மையில் உருவாக்கி இருந்தது. இதன் மூலம் கிராம சேவகர் பிரிவுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று திணைக்கள இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக