27 ஏப்ரல், 2010

சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்







பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சாமியார் நித்யானந்தாவை பின் வாசல் வழியாக அழைத்துச் சென்றனர்.

ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா தனது சகாக்களுடன், இமாச்சல பிரதேசத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள், அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். பெங்களூரிலிருந்து கார் மூலம் ராம் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு பின், ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சாமியார் நித்யானந்தாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நான்கு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்தில் நான்கு நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு சாமியார் ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விசாரணைக்கு பின், நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், ராம் நகர் நீதிமன்றத்துக்கு சாமியார் நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். சைரன் பொருத்திய போலீஸ் வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன், சாமியார் நித்யானந்தா பயணம் செய்தார். முன்னும் பின்னும் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சென்றன.ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 6.10 மணியளவில் வெளியே அழைத்து வரப்பட்டார்.

செஷன்ஸ் நீதிமன்ற அரசு வக்கீல் லோகேஷ் கூறுகையில், ''ராம் நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.ஐ.டி., போலீசார், சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் நான்கு நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி நாராயண பிரசாத் இம்மனுவை விசாரித்து, சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் இரண்டு நாள் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.போலீசார் துன்புறுத்தினார்களா? என்று சாமியாரிடம் நீதிபதி கேட்ட போது, 'போலீசார் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை; நல்ல முறையில் கவனித்தனர். தியானம் செய்வதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்தனர்; கேட்கும் உணவை வழங்கினர்' என்றார்.

பின்னர், சாமியார் நித்யானந்தாவை ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனங்கள், பெங்களூரு திரும்பின. சாமியாரிடம் விசாரணை தொடர்ந்தது.கடந்த முறை ராம் நகர் நீதிபதி வீட்டில், சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்ட போது, செருப்பு வீசப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சாமியாரை அழைத்து வந்த வாகனத்தின் 100 அடி தூரத்திலேயே, பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாமியார் நித்யானந்தாவை, நீதிமன்றத்தின் முன் வாசல் வழியாக அழைத்துச் செல்லவில்லை. பின் வாசல் வழியாகத்தான் சாமியாரை அழைத்துச் சென்றனர்.மின் தடை காரணமாக சாமியார் நித்யானந்தா, நீண்ட நேரம் நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தமிழக போலீசார் மனு : சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி, கர்நாடகா கோர்ட்டில் தமிழக போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.சென்னையில் பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கொடுத்த மோசடி புகாரின் பேரில், நித்யானந்தா மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. தற்போது நித்யானந்தா கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையும் பெங்களூரு சென்றுள்ளது. தொடர்ந்து, சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவையும் அவர்கள் கோர்ட்டில் அளிக்க உள்ளனர்.

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி : சாமியார் நித்யானந்தாவுக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, பெங்களூரில் உள்ள ஜெயதேவா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக