27 ஏப்ரல், 2010

அரசின் கணக்கு வாக்கெடுப்புக்கு ஐதேக கடும் எதிர்ப்பு

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்குத் திராணியற்ற அரசாங்கம், நாட்டின் ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றி, மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. நம்பிக்கைத் துரோகமான இத்தகைய முயற்சியைக் கண்டிக்கின்ற அதே வேளை நாடாளுமன்றத்தில் எதிரணிகளை இணைத்துக் கொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, இதுவரை காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதானது பயங்கரமானதும் கவலைக்குரியதுமானது என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி. மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களது கனவுகளையும் சிதறடிக்கும் வேலைத் திட்டமே இந்த கணக்கு வாக்கெடுப்பாகும் என்று கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பு ஒன்றையே நடத்தியது.

புதிய அரசாங்கம் அமைத்ததன் பின்னர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் மீண்டும் கணக்கு வாக்கெடுப்பையே நடத்தப் போவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு கவலை அளிக்கின்றது. யுத்தம் உக்கிரமடைந்திருந்த கால கட்டத்தில் மக்கள் வயிற்றை இறுக்கிக் கொண்டு நாட்களைக் கடத்தி வந்தனர். யுத்தம் நிறைவடைந்ததும் நிம்மதியடைய முடியும் என்றும் நிவாரணங்களுடனான சக வாழ்வைக் கொண்டு நடத்த முடியும் என்ற அபிலாஷையிலும் திளைத்திருந்தனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களை ஏமாற்றமடையச் செய்கின்ற அதேவேளை, ஒருவித விரக்திக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளது. உண்மையில், மக்கள் படும் துன்பங்களை வேதனைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருப்பதே வேதனையளிக்கின்ற விடயமாகும்.

உறுதி உடைக்கப்பட்டு விட்டது

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை நடத்திய அரசாங்கம் புதிய அரசு அமையப் பெற்றதும் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று உயரிய சபையான நாடாளுமன்றத்தில் வைத்து உறுதியளித்திருந்தது.

அந்த உறுதிப்பாட்டை அரசாங்கமே இன்று உடைத்து எறிந்துள்ளதைக் காண முடிகின்றது. 2010ஆம் ஆண்டில் 5 மாதங்களைக் கடந்தாவது நிவாரணம் கிடைக்கும் என்றும் சம்பள அதிகரிப்புகள், விலைவாசி குறைத்தல், ஊக்குவிப்பு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் அதனால் கிடைக்கப் பெறுகின்ற நன்மைகளையும் இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நிராகரிக்கப்பட வேண்டியதும் அதே போல் சகல தரப்பினராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயற்பாடாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்த்துப் போராடுவோம்

வரவு செலவுத் திட்டத்தைக் கூட தயார் செய்து கொள்வதற்கான தகுதியும் திராணியும் இன்றைய அரசாங்கத்திற்கு இல்லை என்பது இன்று தெளிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான நிதி வருமானம் இல்லை என்பதும் புலனாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் அதனிடம் கொண்டு நடத்துவதற்கான நிதி இல்லை. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான உபாயத்தை கண்டறிவதற்கும் வழி தெரியாது தடுமாறும் அரசாங்கமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகழ்கின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பேற்றதன் பின்னரே புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியானால் அந்த வரவு செலவுத் திட்டம் 2011ஆம் ஆண்டுக்கானதேயன்றி 2010ஆம் ஆண்டுக்கானதல்ல.

இதுவே உண்மை.

எனவே சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இத்தகைய செயற்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் தமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றது.

கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக