10 மார்ச், 2010

பீற்றர் றிக்கெட்ஸ் - ரோஹித போகொல்லாகம சந்திப்பு



உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் , மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும், மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்களை அனுமத்தித்தமைக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பீற்றர் றிக்கெட்ஸ் இதன்போது பாராட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முக்கிய அரசியல் முயற்சி என ரோஹித போகொல்லாகமவிடம் தெரிவித்த பீற்றர் றிக்கெட்ஸ், இத்தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடைபெற பிரித்தானியா உதவும் என உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை குறித்தும் பீற்றர் றிக்கெட்ஸ் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக