23 மார்ச், 2010

ராஜபட்சவின் ஆட்சியை அகற்ற வேண்டும்: தேசிய புத்த பிக்கு முன்னணி




இலங்கையில் அதிபர் ராஜபட்சவின் ஆட்சி நாட்டுக்கு ஒவ்வாத போலியான அரசாங்கம், இதை அகற்ற பொதுமக்கள் தயாராக வேண்டும் என்று தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு நூலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கை தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"போருக்குப் பின்னர் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்குமாறு அரசை வலியுறுத்தினோம். எனினும், ஆளுங்கட்சி தமது அரசியல் எதிர்காலத்தைப் பலப்படுத்கிக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தது. இலங்கையின் தேசிய பிரச்னைகள் குறித்து சிந்திக்கவில்லை.

சரத் பொன்சேகா கைது போன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளை அரசு மேற்கொண்டது. அதிபரை கொலை செய்யவும் ஆட்சியைக் கைப்பற்றவும் பொன்சேகா திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

பொன்சேகா வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தாமாகவே விலகிக் கொள்கின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

ராஜபட்சவின் ஆட்சி நம் நாட்டுக்கு ஒவ்வாத ஆட்சியாகும். எனவே, இதை அகற்ற பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையின் கௌரவத்தை பாதுகாப்பது அனைத்து இன மக்களின் கடமையாகும்.''

இவ்வாறு தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக