23 மார்ச், 2010

வடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் குறித்து எதிர்க்கட்சிகளின் மௌனம் ஏன்?


:

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்தே பொது எதிரணி கூட்டணியாக செயற்பட்டன.

இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஏன் இன்னும் தெரிவிக்கப்படவில்லை? குறைந்தபட்சம் நிறையாகவோ அல்லது குறையாகவோ விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இன்றுவரை மௌனம் சாதிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க்கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அதனை கடுமையாக மறுத்திருந்தன. அந்த இரகசிய உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு விடயம் காணப்பட்டதாக நாங்கள் கூறினோம்.

இந்நிலையில் அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் . காரணம் நாங்கள் அன்று கூறிய விடயங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் அன்று கூறிய விடயத்தை தமிழ்க் கூட்டமைப்பு இன்று நிரூபித்துள்ளது.

எமது நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஏன் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகின்றோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக