18 பிப்ரவரி, 2011

குட்டி அரசாங்கத்தை அமைப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது: கரு

குட்டி அரசாங்கம் ஒன்றை அமைக்க வடபகுதி மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது. தமிழ் சிங்களத் தலைவர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என்று ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான ஐ.தே.க. வின் செயற்பாடுகளுக்கு இன்றைய யாழ். விஜயம் வெற்றியளித்துள்ளது. நாம் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே கொழும்பு திரும்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். காரை நகரில் அமைந்துள்ள விஜய கலா மகேஸ்வரன் எம்.பி.யின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கரு ஜெயசூரிய எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐ.தே.க. வின் விஷேட குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளது. இந்த வருகையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் வடக்கு மக்கள் தமது தலைவர்களை ஐ.தே.க. வினூடாக மீண்டும் பெற்றுக்கொள்ள இதுவொரு சந்தர்ப்பமாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் எம்.பி. அமரர் தியாகராசா மகேஸ்வரனை ஞாபகப்படுத்த வேண்டும். அவரது இழப்பு தமிழ் சமூகத்துக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது. இந்த நாட்டில் சகல இனமக்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். இதற்கு அமைவாக தமிழ் சிங்கள தலைமைகள் இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தன. அந்த சுதந்திரத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

83 களில் இந்நாட்டில் துரதிஷ்டவசமாக இனங்களுக்கிடையே முரண்பாடுகள் மோதல்கள் தீவிரமடைந்தது. இதனை மீண்டும் தொடர இடமளிக்க முடியாது.

இரத்த தானம் செய்யும் போது தமிழ், சிங்கள வேறுபாட்டினை காணமுடியுமா? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஐ.தே.க. விற்குள் அனைத்து இன பிரதிநிதிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து சகல இன மக்களுக்குமான ஜனநாயக உரிமைகள் மற்றும் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுக்க ஐ.தே.க. முன்னின்று செயற்படும். இதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக