18 பிப்ரவரி, 2011

இந்திய மீனவர் விடுதலை







இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ளுர் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்களும் சட்டமா அதிபரின் விசேட பணிப்புரைக்கமைய பொலிசாரினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 25 இழுவைப் படகுகளும் விடுவிக்கப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை கடற்பரப்பிலும், மாதகல் கடற்பரப்பிலும் இரண்டு கட்டங்களாக உள்ளுர் மீனவர்களினால் இரண்டு தினங்ளில் சுற்றிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் உத்தரவிட்டு, மேல் நடவடிக்கைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு பொலிசாருக்குப் பணித்திருந்தன.

இதனையடுத்து, சட்டமா அதிபரிடம் இருந்து கிடைத்த விசேட பணிப்புரைக்கமைய, இந்த மீனவர்கள் அனைவரும் கடலில் எங்கெங்கு கைது செய்யப்பட்டார்களோ அந்தந்த இடங்களில் கொண்டு சென்று விடுதலை செய்யுமாறு இந்த நீதிமன்றங்கள் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றன.

இந்திய மீனவர்கள் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மீனவர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீனவர்கள் 16 பேரைக் காணவில்லை

இதற்கிடையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை மாலை 3 படகுகளில் கடலுக்குச் சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என்றும், அந்தப் படகுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக 4 படகுகளில் சென்ற பத்து மீனவர்களையும் காணவில்லை என்றும், பருத்தித்துறை பிரதேச மீனவர்களும் கடற்படையினரும் இவர்களைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக