3 ஜனவரி, 2011

வடக்கு, கிழக்கில் அதிக மழை பெய்யும் சாத்தியம் நாட்டில் 4 இலட்சம் பேர் பாதிப்பு: அம்பாந்தோட்டையிலும் வெள்ளம்


கிழக்கு ஊடாக வீசுகின்ற காற்றில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (3ம் திகதி) அதிக மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த அடைமழை காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 அயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 675 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களு க்கு தொடர்ந்தும் அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை அம்பாந்தோட்டையில் 100.6 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கூறினார்.

இதேவேளை இன்று பிற்பகலிலும், மாலையிலும் நாடெங்கிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யமுடியும். அதனால் இடி, மின்னல் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக மட்டு. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 474 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 86 ஆயிரத்து 359 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5166 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 341 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2248 குடும்பங்களைச் சேர்ந்த 7889 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1464 குடும்பங்களைச் சேர்ந்த 5841 பேரும் திருமலை மாவட்டத்தில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 1054 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக 1488 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 3962 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை இணைப்பாளர் சார்ஜண்ட் எம்.ஜி.ஏ. நந்தன கூறுகையில், சாமோதா கமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸாவெவ குளத்தின் அணை நேற்று முன்தினமிரவு திடீரென உடைப்பெடுத்தது.

இதன் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்தோடு 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக