3 ஜனவரி, 2011

தமிழ்க் கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்



தலைவர் த.சித்தார்த்தன்- தமிழ்க்கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே புளொட் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேர் கண்டவர் பி.வீரசிங்கம்

கேள்வி : எதிரும் புதிருமாக இருந்த தமிழ்க்கட்சிகள் தற்போது ஒன்றுகூடியுள்ளன. இது வரவேற்கத்தக்க விடயம். எனினும் கட்சித் தலைவர்கள் மத்தியில் தம்மைப் பற்றித் தாமே பெருமை கொள்ளும் ஈகோ மனப்பான்மை இன்னமும் இருப்பது போலத் தெரிகிறதே?

பதில் : தமிழ் அரங்கிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படக்கூடியதொரு நிலையை தோற்றுவித்துள்ளது. ஒரேவிதமான கொள்கைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் தற்போது ஓன்று சேர்ந்திருக்கின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. அரசியலில் மாத்திரமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட அந்த ஈகோ இருக்கிறது. தமிழ்க்கட்சிகளுடனான கலந்துரையாடலில் என்னால் ஒரு விடயத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. எல்லாக் கட்சித்தலைவர்களும் ஒரளவுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பேசினார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டும் என்பதை உணர்ந்து பேசப்பட்டன. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் பிரதிபலிப்பாக இரு தரப்பிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்து பேசி வருகிறோம். ஜனவரி முதல்வாரத்தில் மீண்டும் ஒன்றுகூடி ஆராயவிருக்கிறோம். உடனடியாகவே ஓரிரு வாரங்களில் பேசி முடிவெடுக்கக்கூடிய விடயங்கள் அல்ல. எனவே ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து பேசப்படும் என நான் நம்புகின்றேன்.

மக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, ஜனாதிபதி தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைத்தால் அதனை தான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஜனாதிபதி மாத்திரமல்ல இந்திய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினர் இதனையே வலியுறுத்துகின்றனர்.

எனவே திம்பு மாநாட்டின்பின் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் இப்போது ஒன்றுகூடியிருக்கின்றன. திம்பு மாநாட்டின்போது அதுவொரு கோட்பாடாக இருந்தது. அதனை பிரேரணைகளாக முன்வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்தக் காலம் போய்விட்டது. இதற்கு அரசாங்கமும் சிங்கள சமூகமும் என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாக்கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்கும் என்றால் நன்றாக இருக்கும். அந்த நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்கின்றன.

கேள்வி : எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தப்படும்மென நம்புகிறீர்கள்?

பதில் : இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனினும் ஒரு கூட்டான செயற்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் நிலைமைகளையும் கட்சிகள் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகிறது.

கேள்வி : ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. ,ந்நிலையில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதில் அவர்கள் சொல்லும்போது மொழிகள் வித்தியாசப்பட்டிருக்கலாமேயொழிய அடிப்படையில் வடகிழக்குக்கு சரியான அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்பட வேண்டுமென்பதை தெளிவாக கூறியிருக்கின்றன. இது தொடர்பில் வேறுபாடுகளை என்னால் பார்க்கமுடியாமல் இருக்கிறது. கட்சிகளைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புக்களுடன் போராடி வந்த கட்சிகள்தான் இருக்கின்றன. சில வேளைகளில் பாதைகள் மாறியிருக்கலாம். புலிகள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க யோசித்திருக்கலாம். ஆயுதப்போராட்டம் இனி சரிவராது பேசித் தீர்க்கலாம் ஜனநாயக ரீதியில் செயற்படுவது என கட்சிகள் யோசித்திருக்கலாம். புலிகளைத் தவிர ஏனைய அமைப்புக்கள் எல்லாமே 87ற்கு பின் ஈழக்கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைக் காணலாம் என்ற முடிவுக்கு வந்தன. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல ஈகோ தான் பிரச்சினையாக இதுவரைகாலமும் இருந்தது. அதையும் களைந்து ஒரு ஒற்றுமைப்பாட்டை காண்போமாக இருந்தால் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும். இதில் கலந்துகொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலம் தொட்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த அழிவுக்கு அனைவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு புலிகளை மட்டும் குறைகூறிவிட்டு ஒதுங்கிவிட முடியாது. உயிரோடு இருக்கும் நாங்களாவது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும் அந்த நம்பிக்கை எமக்கிருக்கிறது. இதனை எல்லாக் கட்சிகளுமாகச் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றன.

கேள்வி : தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைக்கு ஆரம்பகாலத் தமிழ்த் தலைவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

புதில் : அதனை நான் அப்படிப் பார்க்கவில்லை. அப்போதைய தலைவர்கள் எவரும் தங்களது சுய லாபங்களுக்காக இளைஞர்களைத் தூண்டி விட்டனர் எனக்கூறுவது தவறு. அப்போதிருந்த சூழ்நிலையில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியாக இருந்திருக்கும். அவர்களைப் பொறுத்தவரையில் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுத்த வேளையில் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் அதனை இராணுவ ரீதியாக நசுக்க முற்பட்டன. இளைஞர்களைத் தூண்டி விட்டதன் தாக்கம் அப்போதைய தலைவர்கள் மத்தியில் இருந்திருக்கலாமே தவிர ஒருபோதும் நேரடியாக ஈடுபடவில்லை என்றே கூறவேண்டும். சாத்வீகப் போராட்டங்கள் வெற்றியளிக்கவில்லை, தொடர்ந்து அழிவையே பார்க்கிறோம் என்ற காரணத்தினால்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தவறு எனக்கூறமுடியாது. கடைசிக்காலங்களில் இயக்கங்களிடையே ஏற்பட்ட போட்டிகள், அத்துடன் புலிகள் தாங்கள்தான் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள் எனக்கூறி ஏனைய இயங்கங்களைப் பலவீனப்படுத்தினர். தாங்கள்தான் ஒரேயொரு இயக்கம் என்றனர். புலிகள் அழிக்கப்பட்ட உடன் தமிழ் மக்களின் போராட்டம் முழுவதும் அழிக்கப்பட்டதான ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதற்கும் போராட்ட ஆரம்பத்திற்கு எதுவித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அது எமது தவறு. இதற்காக நாங்கள் அப்போதைய தலைவர்களைக் குறைகூறுவதில் பலனில்லை. அவர்கள் அன்று இருந்த நிலைமைக்கேற்றவாறு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

விடுதலைப் புலிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் 87ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று இந்நாட்டில் தனிநாடு என்ற கோரிக்கை சாத்தியமற்றதொரு விடயம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இந்தியாவின் அல்லது ஏதாவதொரு நாட்டின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியொரு நாட்டை உருவாக்கியிருக்க முடியாது. அதனை சரியாக உணர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அடைய முடியாத இலக்குக்காக அநியாயமாக எமது மக்களைப் பலியாக்கிவிட்டார்கள்.

எம்மைப் பொறுத்த வரையில் இதனை நாங்கள் 1987ல் நன்றாக உணர்ந்து கொண்டோம். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் நலிவடைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். அக்காலப்பகுதியில் தனிப்பட்ட நன்மைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

வவுனியாவில் நாங்கள் மிகப் பாரியளவில் வேலைகளை முன்னெடுத்துச் சென்றோம். அரசாங்கத்தின் பங்காளிகளாக இல்லாமல் அவர்களின் உதவியை பெற்றுக்கொண்டு மக்களுக்காக சேவையாற்றினோம். ஆனால் எமக்கு துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், ஐந்தாம் படை என்ற பெயர்களெல்லாம் சூட்டினார்கள். இறுதியில் இன்று நாம் என்ன நிலையில் இருக்கின்றோம். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தால் ஈழம் அமைக்க முடியாது. நாட்டில் பாரிய அழிவு ஒன்றை உருவாக்கும் என்பதை உணர்ந்துதான் இந்த மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அக்காலப்பகுதியில் இதனை மக்களும் கூட உணர்ந்து கொள்ளவில்லை. கட்சிகளும் உணர்ந்து கொள்ளவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அன்று செய்ததை அன்று சொன்னதைத்தான் இன்றும் என்றும் சொல்வோம் செய்வோம். மக்களின் மறுவாழ்வு மக்களின் அடிப்படை உரிமைகள் இரண்டு விடயங்களிலும் எப்போதும் பின்வாங்கியதில்லை பின்வாங்கப்போவதுமில்லை.

கேள்வி : கடந்த மூன்று தசாப்தகால கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு இட்டுச் செல்லக்கூடாது என்ற எண்ணம் தமிழ்க்கட்சிகள் மத்தியில் இருக்கிறதா?

பதில் : நிச்சயமாக! தமிழ்க்கட்சிகள் மத்தியில் குறிப்பாக ஆயுதம் தாங்கிய தமிழ் அமைப்புக்கள் மத்தியில் கடந்த காலங்களில் மிகவும் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. இதற்கு எவரையும் குற்றும் கூறுவதில் எதுவித அர்த்தமும் இல்லை. இதையெல்லாம் மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக வர முடியாது. அது சாத்தியப்படாவிட்டாலும் கூட ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். ஒரே குரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகள்தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?

பதில் : தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ_டன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புளொட் என்ற வகையில் நாங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ_டன் நல்ல உறவுகள் இருக்கின்றன. அது மாத்திரமல்ல அஷ்ரப் காலத்திலிருந்த அந்த உறவை இன்றும் தற்போதைய தலைவர் ஹக்கீமுடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்க்கட்சிகளுடன் ஏற்படும் உடன்பாடுகள் எல்லாம் எட்ட வேண்டிய விடயங்கள்தான். ஏனெனில் வடகிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கின்றபோது முஸ்லிம்களின் பயங்கள் அபிலாஷைகளுக்கு ஒரு முடிவு காணாவிட்டால் நிச்சயமாக அதுவொரு நிரந்தரமானதும் முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். அனைத்து தரப்பினருடனும் பேசி ஒரு சரியான தீர்வை வடக்கு கிழக்குக்கு முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை அவர்களின் பயத்தை நீக்கக்கூடியதொரு தீர்வை அணுக வேண்டும். அதைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். நன்றி.
தோழர் சுந்தரம் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினம்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்;தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர்.சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் இன்று முற்பகல் 9.00மணியளவில் நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்த பிரபாகரனால் கோழைத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக