1 ஏப்ரல், 2011

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே எந்தப் பேச்சும் அமையவேண்டும்: ஹெல உறுமய

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வகையான பேச்சுக்களை நடத்தினாலும் மக்கள் ஆணை வழங்கியுள்ள மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே அவை இருக்கவேண்டும். அதனை மீறி எதனையும் செய்ய முடியாது. மக்களின் ஆணையை தமிழ்க் கூட்டமைப்பும் மதிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் சபைகளே சிறந்த முறைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியதாவது,

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுக்களை நடத்திவருகின்றது. ஆனால் அந்த பேச்சுக்கள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே இடம்பெறவேண்டும் .

காரணம் நாட்டின் அதிகளவான மக்கள் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கே ஆணை வழங்கியுள்ளனர். அதனை அனைவரும் மதிக்கவேண்டியது அவசியமாகும்.

அரசியல் தீர்வு அல்லது எவ்வக்ஷிறான செயற்பாடாக இருந்தாலும் அது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை மீறிச் செல்லக்கூடாது. சகல பிரிவினரினதும் சம்மதத்துடனேயே அனைத்து விடயங்களும் இடம்பெறவேண்டும். மேலும் இந்தியா எம்மீது சுமத்திய மாகாண சபை முறைமையானது தோல்விகண்டுள்ளது என்றே நாங்கள் கூறுகின்றோம். எதிர்பார்த்த விடயம் மாகாண சபை முறைமையில் கிடைக்கவில்லை.

எனவே உள்ளூராட்சிமன்றங்களை அடிப்படையாகக்கொண்டு கிராம சேவை பிரிவுகளை இணைத்து மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் சபைகள் என்ற வேலைத்திட்டமே சிறந்த தீர்வுத்திட்டமாக எதிர்காலத்தில் அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

எனவே நாங்கள மக்கள் சபைகள் என்ற விடயத்துக்கே செல்லவேண்டும். அந்த வேலைத்திட்டத்தை ஊக்குவித்து விரைவில் நாடளாவிய ரீதியில் மக்கள் சபைகளை அமைத்து கிராம்ஙகளின் அபிவிருத்திக்காக செயற்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக