1 ஏப்ரல், 2011

அனைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னரே வட மாகாண சபை தேர்தல்

எஞ்சியுள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னரே வட மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் ஆராயும் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட நாட்டின் எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் இன்னும் நடத்தப்படவேண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி 234 உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் ஆளும் கட்சி 205 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 12 சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சி 9 மன்றங்களையும் கைப்பற்றியிருந்தன.

இந்நிலையில் எஞ்சியுள்ள 101 சபைகளுக்கு தேர்தலை நடத்தியதன் பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் ஆராயும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு மாகாண சபை தேர்தலானது தற்போது பிரதேசவாரி முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு முன்னர் மீள்குடியேற்றம் நிறைவடையவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது தொகுதி மற்றும் பிரதேசவாரி ஆகிய இரண்டு முறைமைகளும் கலந்த வகையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்று அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக