16 பிப்ரவரி, 2011

வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் சேதமுற்ற பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்




தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்படவேண்டாமெனவும் ஜனாதிபதி வேண்டுகோள்வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக சேதத்திற்குள்ளான பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். முக்கியமாக அரச அதிகாரிகள் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டின்போது எந்த விதத்திலும் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்படக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக திட்டமிட்டு நீண்டகால வேலைத் திட்டமொன்றுடன் இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் சேதத்திற்குள்ளான பிரதேசங்களை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முதல் கூட்டம் நேற்று (15) அலரி மாளிகையில் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் கூடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரடியாக மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டின் கீழ் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும், மறுசீரமைப்புப் பணிகளை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

எதிர்வரும் போகத்தில் பயிரிடக் கூடியவாறு முன்னுரிமை அளித்து குளங்கள் வாய்க்கால்கள் என்பன துரிதமாக திருத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. விளை நிலங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக பாதுகாப்புப் படையினரதும் பொதுமக்களதும் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் அதற்கு உபகாரமாக நிதி அன்பளிப்பு, பொருள் அன்பளிப்பு மற்றும் உலர் உணவு மானிய முறைமையொன்று என்பவற்றினை அறிமுகம் செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மண்சரிவினால் சேதத்திற்குள்ளான வீடுகளை புனரமைப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரச கட்டடங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

முழுமையாக சேதத்திற்குள்ளான வயல் நிலங்களுக்கு அடுத்த போகத்தில் இலவசமாக விதை நெல், உரவகைகள் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அமைச்சர்கள், சேதத்திற்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், குறித்த பிரதேசங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக