16 பிப்ரவரி, 2011

ஏனைய மதத்தினருடன் நெருக்கமாக வாழ உறுதிபூணுவோம்






நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளான இன்றைய தினத்திலே அன்னார் போதித்தவாறு, ஏனைய மதத்தவர்களுடன் நெருக்கமாக பழகி, சகோதரத்துவத்துடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு நாம் உறுதிபூணுவோம் என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவில் பிறந்த முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் உலகவாழ் முஸ்லிம் களுக்கும் வாழ்த்துச் செய்தியொன்றினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“அல் அமீன்" மற்றும் “அஸ் ஸாதிக்" அதாவது “நம்பிக்கையாளர்" மற்றும் “உண்மையாளர்" போன்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட அன்னார் ஒரு போதும் பொய் சொல்லாத ஒருவராகக் காணப்பட்டதுடன், வியாபாரியாகக் காணப்பட்ட அவர் வியாபாரத்தில் ஒருபோதும் மோசடியில் ஈடுபட்டதில்லை என்பது வரலாற்றின் மூலம் தெளிவாகின்றது.

அத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இன்றைய தினத்திலே அன்னார் போதித்த, உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, பொறுமை, அடுத்தோர் நலனில் அக்கறை செலுத்துதல், கருணை மற்றும் அன்பு போன்ற நற்பண்புகளுக்கு முக்கியத்துவ மளித்து ஏனைய மதத்தவர்களுடன் நெருக்கமாக பழகி, சகோதரத்துவத்துடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு மேலும் நாம் உறுதிபூணல் வேண்டும்.

எனவே, அன்னார் போதித்த இஸ்லாம் சமயத்தையும், அவர் வழிகாட்டிய நற்பாதையையும் பின்பற்றி ஒருவருக்கொருவர் சமாதானமாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து செழிப்பானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக