16 பிப்ரவரி, 2011

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாட்டில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்


பொதுநலவாய நாடுகளின் ஆசிய வலய மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கை தொடர்பில் தவறான கூற்றை வெளியிட்டுள்ளார். அவர் வழமைபோன்று மீண்டும் இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். யுத்தகாலத்தில் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரியப்படுத்தும் நோக்கில் மேற்கு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டுவந்தார். அதனை மீண்டும் அவர் செய்து வருகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடவுளின் சாபக்கேட்டினாலேயே நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கே தற்போது கடவுளின் சாபக்கேடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் ஆதரவாளனுக்கு யார் தலைவர் என்றே தெரியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது: பொதுநலவாய நாடுகளின் ஆசிய வலய மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கை தொடர்பில் தவறான கூற்றை வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அவர் கடந்த காலங்களிலும் பல தடவைகள் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் தொடர்பில் தவறான பிரசாரங்களை மேற்கு நாடுகளில் மேற்கொண்டுவந்தார். வழமைபோன்று அதே விடயத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார். நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பில் தவறான விடயங்களை கூறிவந்தார்.

யுத்தகாலத்திலும் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரிப்படுத்தும் நோக்கில் மேற்கு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டுவந்தார். மீண்டும் இந்த செயற்பாட்டை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சென்று அக்காலத்தில் இலங்கை தொடர்பாக தவறான பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தார். தற்போது பொதுநலவாய மாநாட்டில் மீண்டும் ஒரு முறை தவறான பிரசாரத்தை செய்துள்ளார்.

கடவுளின் சாபத்தினாலேயே நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. ஆனால் கடவுளின் சாபம் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் ரவி கருணாநாயக்கவே கோரிக்கை விடுத்துள்ளார். யார் தலைவர் என்று கட்சியின் ஆதரவாளருக்கே தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கட்சிக்குள் எந்தளவு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது. எமது ஆளும் கட்சியில் எவ்விதமான நெருக்கடியும் பிரச்சினையும் இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாக தேர்தலுக்கு தயாராகிவருகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக