16 பிப்ரவரி, 2011

200 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்து பெண்ணொருவர் பலி; 25 பேர் படுகாயம்

தனியார் பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருபத்தைந்து பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் கொத்மலை காச்சாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புசல்லாவையிலிருந்து பெரட்டாசி நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டியே இதன்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் எஸ்.ஆரோக்கியமேரி (வயது 61) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய இருபத்தைந்து பேர் சிகிச்சைக்காக புசல்லாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சாரதி உட்பட நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அந்நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆறு முன்பள்ளிச்சிறுவர்கள், வியாபாரிகள், வன இலாகா அதிகாரிகள் எனப்பலரும் அடங்குவதாக தெரிவிக்கும் புசல்லாவை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களை மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்செயலாளர் எம்.எஸ்.எஸ்.செல்லமுத்து ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இந்த தனியார் பஸ் விபத்து ஏற்படுவதற்கு பாதை சீர்கேடே பிரதான காரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புசல்லாவை பெரட்டாசி பாதை நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ளதோடு, இந்த பாதை சீர்கேட்டை காரணம் காட்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இப்பாதையில் அண்மைக்காலங்களில் மட்டும் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, பாதையை சீர் செய்து தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் இப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக