16 பிப்ரவரி, 2011

நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நட திட்டம்






இந்த வருடத்தில் நாடு பூராவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகளை நட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்று கூறினார்.

‘திவிநெகும’ திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 13 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் 27 இலட்சம் தென்னை மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் அவர் கூறினார்.

‘திவி நெகும’ தேசிய திட்டம் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 10 இலட்சம் வீட்டு பொருளாதார அபிவிருத்தி அலகுகளை முன்னெடுக்கும் திட்டத்தினூடாக தெங்கு பயிர்ச்செய்கையையும் ஊக்குவிக்க உள்ளோம். ஒவ்வொரு வருடமும் 20 இலட்சம் தென்னை மரங்களை நட வேண்டும் என்ற திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறிப்பிட்டளவு தென்னை மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் தெங்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

2 வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் தெங்கு பயிரிடப்படவில்லை. ஆனால் வடக்கில் பளை, அச்சுவேலி போன்ற இடங்களில் தெங்கு நாற்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு குச்சவெளி, பாசிக்குடா போன்ற இடங் களிலும் தெங்கு நாற்றுமேடைகள் அமை க்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தெங்கு உற்பத்தியை மேம்படுத்த உள்ளோம்.

தென்னை தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனால் ஒரு தேங்காய் கூட நாம் இறக்குமதி செய்யவில்லை என்றார்.

அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன கூறியதாவது: வீட்டுத் தோட்டங்களிலோ காணிகளிலோ மரம் நடக்கூடிய சகல இடங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த வருடம் 2700 மில்லியன் தேங்காய் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2317 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டன. 400 மில்லியன் குறைவாகவே தேங்காய் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தினூடாக தெங்குப் பயிர்ச் செய்கைக்கு பாரிய உந்து சக்தி வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக