திடீர் அனர்த்தக் கடன் மீள அறவிடும் காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானம்அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் துரிதமாகத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளார்.
அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் அனர்த்த கடன்களை மீள அறவிடும் காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனர்த்த கடன்களை அறவிடும் காலம் இதுவரை 10 மாதங்களாக இருந்த போதும் அதனை 24 மாதங்களாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொகுகே, கீதாஞ்சன குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மேல்மாகாண ஆளுநரும் தொழிற்சங்கத் தலைவருமான அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் பதவியுயர்வுகள் சம்பந்தமாக இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அரச ஊழியர்கள் முகங்கொடுக்கும் அரச மொழிக்கொள்கை பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
முறையான பயிற்சி செயற்றிட்டங்கள் மூலம் இதற்குத் தீர்வு காணப்படுவதற்கான வழி காட்டுதல்களை இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
சுகாதாரத்துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டு ள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு மிக முக்கியமான சுகாதார சேவை தடைப்பட இடமளிக்க முடியாது. சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தொழில் சங்கத்தினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற் கல்வித் தலைவர்கள் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டமான மஹிந்த சிந்தனை கருத்திட்டத்திற்கு உச்ச அளவில் பங்களிப்பினை வழங்கப் போவதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக