22 டிசம்பர், 2010

அகதி முகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பெரும் அவலம்: மாவைசேனாதிராஜா

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அகதிமுகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை எதிர்நோக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜாவும் வடகிழக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்க விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அவருடைய விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் தற்போது பெய்துவரும் கடும் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் முகாம்களில் தங்கியுள்ள மக்களே அவலங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் இவர்களுக்கான கூடாரங்களோ, தங்குமிட வசதிகளோ இல்லை. எனவே இதனைக் கருத்திற் கொண்டு மீள்குடியேற்ற அமைச்சிடம் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

இதனை அடுத்தே மீள்குடியேற்ற அமைச்சர் வடகிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார். எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இன்னமும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற் கொண்டு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக