மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சகல வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட் டமைப்பு ஒத்து ழைப்பு வழங் கும் என யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா நேற்று கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வைபவம் நேற்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனின் தலைமையில் நடைபெற்றது. சுமார் 5242 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டன. துணுக்காய் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகள் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்காக நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சரும், பிரதி அமைச்சரும் உதவி அளித்து வருகின்றனர். இது குறித்து எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 30 வருட யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசம் 30 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது. யுத்தத்தினால் முல்லைத்தீவு மக்கள் ஓரிரு தடவைகள் மட்டுமன்றி பல தடவைகள் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பது குறித்து நானும், செல்வம் அடைக்களநாதனும் அமைச்சருக்கு அறிவித்தோம்.
அமைச்சர் இது குறித்து ஜனாதிபதியுடன் பேசி 45 மில்லியன் பெறுமதியான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
முல்லைத்தீவு அரச அதிபர் என் வேதநாயகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 4500 ரூபாய் பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம் செட்டிகுளத்தில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக