17 டிசம்பர், 2010

வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல:





எல்லாவல மேதானந்ததேரர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.

சிங்கள மக்களோ சிங்கள அரசியல் வாதிகளோ ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். 1983 கலவரத்துக்கு சிங்கள மக்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. அதில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள மக்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னர் வடக்கில் சுமார் 40 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தனர். ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றபோதிலும் இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்களாகிய குறித்த சிங்கள மக்களை மீள்குடியேற்றுமாறு கூறுவதற்கு யாருமில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு நேற்று கொழும்பில் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக