17 டிசம்பர், 2010

தலைமன்னார்-இராமேஸ்வரம்; கொழும்பு-தூத்துக்குடி கப்பல் சேவைகள் இலங்கை - இந்தியா கடற்போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் தினமும் பெருமளவு வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இருநாட்டுக்குமிடையில் கடற் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு நாட் டுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதோடு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார்.

இதன் பிரகாரம், முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும். தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விமான போக்குவரத்து சேவை மாத்திரமே இடம்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பத்தில் கப்பல் சேவைகள் நடைபெற்ற போதும் யுத்தம் காரணமாகக் கடந்த 30 வருடங்களாக கப்பல் சேவை இடம்பெறவில்லை.

மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதனூடாக பெருமளவு மக்கள் நன்மையடைய உள்ளனர். விமானத்தில் பயணம் செய்வதைவிட குறைந்த செலவில் கப்பலில் பயணம் செய்ய வாய்ப்புக்கிட்ட உள்ளதோடு பயணிகளுக்கு புதிய பயண அனுபவமும் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக