16 டிசம்பர், 2010

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்

“அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும்"

அரச அதிகாரிகள் மேற்கொள் ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி; சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை" என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.

அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக