16 டிசம்பர், 2010

வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வசிக்கமுடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேற முடியாது?

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முன்னர் விரட்டப்பட்ட சிங்கள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றவேண்டும்.

நாட்டில் எப் பகுதியிலும் எந்தவொரு மக்களும் வாழும் சூழல் ஏற்படவேண்டும்.

வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் குடியேற முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேற முடியாது என்று வினவுகின்றோம் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் முன்கொண்டு செல்லும் வேலைத்திட்டங்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி முறைமை குறித்து சிந்தித்துக்கொண்டு இருக்கலாம்.

ஆனால் அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரை தற்போதைக்கு மீள்குடியேற்றம், கல்வி, நீர், போக்குவரத்து வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவே தேவைப்படுகின்றன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை செய்துகொடுக்கும் நோக்கில் அரசாங்கம் பாரிய நிதியை செலவிட்டுவருகின்றது. எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்துகொண்டிருக்காமல் மக்களின் நல்வாழ்வுக்காக இவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும்.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூறவேண்டும்.

இதேவேளை தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் மிகவும் சுமுகமான உறவினையே பேணி வருகின்றனர். மக்கள் சமூகங்களுக்கு இடையில் ஒருபோதும் பிரிவினைகள் வந்ததில்லை. புலிகள் தான் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தனர்.

வடக்கிலிருந்து முன்னர் விரட்டப்பட்ட சிங்கள மக்கள் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களின் இடங்களில் மீள்குடியேற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் குழப்பங்கள் ஏற்படலாம். மேலும் யாரும் எந்த இடத்திலும் வசிக்கும் உரிமை இருக்கவேண்டியது அவசியமாகும்.

மேல் மாகாணத்தில் ஐந்து இலட்சம் தமிழ் மக்களினால் வசிக்க முடியுமானால் ஏன் வடக்கில் சிங்கள மக்களால் வசிக்கவோ குடியேறவோ முடியாது? எனவே யார் விரும்பினாலும் வடக்கில் குடியேறலாம். யார் வேண்டுமானாலும் தெற்கில் குடியேறலாம். வெள்ளவத்தையில் காலியில் மாத்தறையில் தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக