16 டிசம்பர், 2010

அவசரகால சட்டவிதிகள் தளர்த்தப்பட வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை

இலங்கையில் அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்படுவதுடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விடயமாக, வடக்கில் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைமுறை தலைவர்கள் உருவாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதகாக மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான வெளிவிவகார உதவிச் செயலர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்தார்.

இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் வாஷிங்டனில் இருந்து நேற்று மாலை நடத்திய தொலைமாநாட்டின் போது எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கை மக்களின் நண்பனாகவே எப்போதும் திகழ்வதாக இலங்கை தொடர்பாக தனது அறிமுகத்தை வெளிப்படுத்திய ரொபர்ட் ஓ பிளேக், யுத்தத்திற்கு பிந்தியதான இலங்கை மக்களின் மாற்றத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் கூறினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்துவருவதாகக் குறிப்பிட்ட பிளேக், அதன் பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதன் பரிந்துரைகள் இலங்கையில் பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஆவன செய்யும் என எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் நிறைவின் பின்னர் சர்வதேசம், குறிப்பாக அமெரிக்கா இலங்கையில் நல்லிணக்கத்தின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்ற நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்? இது தொடர்பாக அமெரிக்காவுக்குள்ள கரிசனைகள் எவை என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளிவிவகார உதவிச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், அமெரிக்கா இலங்கையின் நீண்டகால நண்பனான உள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இயன்ற வரையில் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து, அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கின்ற அதேவேளையில், மேலும் பல விடயங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களில் அநேகமானவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களது ஏனைய தேவைகள் தொடர்பிலும் அவதா னம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

எஞ்சியுள்ளவர்கள் அனைவரதும் முழுமையான விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். தமது அன்புக்குரியவர்களின் கதியை மக்கள் அறிந்துகொள்வது முக்கியமானதாகும். யார் யார் முகாம்களில் உள்ளனர்? யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன போன்ற விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதனைத் தவிர, மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விடயமாக, வடக்கில் மாகாண சபைக்கான புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலமாக புதிய தலை முறைத் தலைவர்கள் அவர்களிடையே உருவாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும். வடக்கை இலங்கையின் ஏனைய பாகங்களுடன் ஒன்றிணைக்கின்ற செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இந்தத் தொலைமாநாட்டில் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதென உண்மையில் அமெரிக்கா கருதுகின்றதா? இதற்கான விசாரணைகளை வலியுறுத்துகின்றதா என முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரொபர்ட் ஓ பிளேக்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அமெரிக்கா அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அந்தக் குழு தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக