16 டிசம்பர், 2010

வவுனியாவில் வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை

வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இளம்பெண் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

வவுனியா கச்சேரியில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன் ஜெயப்பிரவீணா (வயது 27) என்ற இளம் பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சைக்கிளில் இவர் புறப்பட்டுச் சென்றதாகவும் ஆயினும் அன்று காலை 9.30 மணியளவில் அவர் வேலைக்குச் சமுகமளிக்கவில்லை என கச்சேரியில் இருந்து தனக்குத் தகவல் கிடைத்ததையடுத்து தனது மகளைத் தேடிப்பார்த்ததாகவும் எனினும் அவர் எங்கு சென்றார்.

அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலிருப்பதாகவும் காணாமல் போயுள்ள இளம்பெண்ணின் தாயராகிய மகேந்திரராணி ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சேமமடுவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்கள் வவுனியா குருமண்காட்டில் நீண்டகாலமாக வசித்து வருகின்றார்கள் என்பதும் காணாமல் போயுள்ளவர் கடந்த நான்கு வருடங்களாக வவுனியா கச்சேரியில் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன இளைஞனும் சேமமடுவைச் சேர்ந்தவர் என்றும் சேமமடு இரண்டாம் யுனிட்டில் முன்னர் வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனும் யுவதியுமாகிய இவர்கள் இருவரும் இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து இங்குள்ள மக்கள் மத்தியில் ஒருவித பதற்ற நிலைமையும் இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக