புதிய இன்புளுவென்ஸா, ஏ (எச் 1 என்1) வைரஸ் நோய் நாடு முழுவது அதிகளவில் பரவிவருவதால் இந்நோய் தொற்றக்கூடிய அச்சுறுத்தலுக்குரிய வகையினருக்கு உடனடியாக தாமதியாமல் தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சகல மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) நோய் நாடெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற் காகவும், குறிப்பாக இந்நோயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை பெற்றுக் கொடுப்பது மிக அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நோயின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்நோய்க்குரிய ஒரு தொகுதி தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், துறைமுக மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சுற்றுலா கைத்தொழில் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று செல்வோர் நீரிழிவு, இருதய, சிறுநீரக, நுரையீரல், ஆஸ்துமா நோயாளர்கள், கர்ப்பிணிகள் உட்பட இந்நோயின் அச்சுறுத்தலை எதிர் கொண்டிருக்கும் சகலருக்கும் இந்நோயைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்தை பெற் றுக்கொடுக்குமாறு அமைச்சர் அறி வுறுத்தியுள்ளார்.
இந்நடவடிக்கையைத் தாமதியாது பிரதேச மட்டத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்திருப்பதாவது, புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) நோய் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றது.
தற்போது இலங்கையின் நாலாபுறமும் இந்நோய் பரவி இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு குறுகிய காலப் பகுதிக்குள் சுமார் 300 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இந்நோயின் பாதிப்பிலிருந்து தவிர்ந்துகொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை பிரதேச மட்டத்தில் உள்ள மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேநேரம் அரசாங்க சுகாதாரத் துறை ஊழியர்கள் சகலருக்கும் இந்நோய் தொடர்பாக அறிவூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடிமன், காய்ச்சல், இருமல், உடல்வலி போன்றவாறான அறிகுறிகளை மூன்று நாட்களுக்கு மேல் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுவதும், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுவதும் அவசியம் என்று நோய் பரவல் தடுப்பு பிரிவின் மருத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக