7 டிசம்பர், 2010

அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை தூண்டும் வெள்ளைக்காரர்கள்: எஸ்.பி.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு "வெள்ளைக்காரர்கள்' புலம்பெயர் தமிழர்களை தூண்டிவிடுகின்றனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார். இளம் சமூகம் இணையும் போது மொழிப்பிரச்சினை மரணித்துவிடுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இளம் சமூகம் மற்றும் மாணவர்களுக்கான உலக மாநாட்டுக்காக இலங்கையர்களை தயார்படுத்தும் முகமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு "சாலிகா' மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தவிருந்த உரை தடுக்கப்பட்டமையானது ஏகாதிபத்தியவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்ற செய்தியை எமக்கு வெளிப்படுத்தியுள்ளது. 4இலச்சத்து 50ஆயிரத்துக்கும் மேலதிகமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் லண்டன் மாநகரில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வெறும் 450 பேரே கலந்து கொண்டிருந்தனர். இவ் விஜயத்தின் போது நானும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தேன். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு முகத்தை மூடும் விதத்தில் தொப்பியுடனும் பெரிய மூக்குக் கண்ணாடியுடனும் நேரடியாக சென்று பார்வையிட்டேன்.

அதன்போது அங்கிருந்த புலம் பெயர் தமிழர்களுக்கு தேநீரையும், கொக்காகோலாவையும் வெள்ளைக்கார துரைமாரும் அம்மணிகளும் பரிமாறுவதை நான் கண்ணுற்றேன். எம்மைப் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தையும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மையை ஏற்படுத்தவும் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இச் சம்பவத்திலிருந்து தெளிவாகியுள்ளது. எனவே ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிராக நாமனைவரும் ஒன்று திரள வேண்டும்.

தென் ஆபிரிக்கா பிரிட்டோரியா நகரில் இம் முறை இடம்பெறும் இம் மாநாட்டிற்கு 150 இலங்கையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்து பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். எமது நாட்டின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்படவுள்ளன.

இளம் சமூகம் இணையும் போது மொழிப் பிரச்சினை மரணித்துவிடும். அதன்போது இளைஞர்களுக்கும், மகளிருக்கும் ஏற்ற விதத்தில் மொழியை ஒழுங்குபடுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதன்போது இனத்துவேஷம் வர்ண பேதங்கள் தலைதூக்காது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக