7 டிசம்பர், 2010

கத்தோலிக்க மக்கள் வேண்டி நின்ற சமாதானம் நாட்டில் நிலை நாட்டப்பட்டுள்ளது

முழு ஆசியாவுக்கும் உரிய கர்தினல் பதவி எமக்கு கிடைத்துள்ளது - ஜனாதிபதி

இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களுக்கு இதுவொரு பொற்காலம். ஏனெனில் ஒருபுறம் கத்தோலிக்க மக்களின் வழிகாட்டியான இயேசுநாதரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிவரும் காலம், மறுபுறம் மூன்று தசாப்தங்களாக கத்தோலிக்க மக்கள் வேண்டிநின்ற சமாதானம் நாட்டிலே நிலைநாட்டப்பட்டுள்ளமை. இவற்றுடன் முழு ஆசியாவிற்கும் வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு கர்தினல் பதவி எமது நாட்டின் கத்தோலிக்க மக்களுக்குக் கிடைத்துள்ளமை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (06) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கர்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; இந்நாட்டின் கத்தோலிக்க மக்களுக்குக் கிடைத்த மகத்தான ஆசீர்வாதமாக இது காணப்படுவ துடன் எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகவும் விளங்குகின்றது என்றும் கூறினார். எமது மெல்கம் ரஞ்ஜித் அதிமேற்றிராணியாருக்கு கர்தினல் பதவி கிடைப்பதற்கு அன்னாரின் அர்ப்பணிப்பும் சேவையுமே காரணமாக அமைந்துள்ளது. மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சிறுபராயத்திலிருந்தே சமய ரீதியான பாதையை தேர்ந்தெடுத்த ஒருவர்.

அவர் சமயக் கல்வியை தொடரும்போது அதன் மகத்துவத்தை படிப்படியாக புரிந்துகொண்டுள்ளார்.

கர்தினலின் வாழ்க்கையிலே நாம் பல நற்பண்புகளை காணுகின்றோம். நீங்கள் எங்கிருந்தாலும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்த ஒருவர் அன்று நீங்கள் வத்தளை பமுனுகம மிஷனிற்குப் பொறுப்பான இரண்டாவது ஆயராக நீர்கொழும்பு களப்பிற்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்துவந்த கப்புகம்கொட, தும்கல்பிட்டிய மீனவ மக்களுக்கு ஆற்றிய பணியானது மகத்தானது.

அதேபோன்றுதான் களுத்துறை, இரத்தினபுரி பிரதேசங்களில் பணியாற்றும்போதும் நீங்கள் கத்தோலிக்க மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றியவரல்ல, அனைத்துச் சமூகத்தினரதும் விடிவிற்காக பாடுபட்டவர். குடிசைகளில் வாழும் மக்கள் குடிசைகளிலேயே வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்தில்லை. அவர்களையும் மாடி வீடுகளில் வாழ வைப்பதற்காக உழைத்த மாமனிதர். சுனாமி வந்தபோது நீங்கள் பணியாற்றிய விதம்பற்றி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வாழ்க்கையை கட்டியெழுப்ப எதுவித பேதமுமின்றி செயற்பட்டமை தொடர்பாக அந்த மக்கள் இன்றும்கூட மிகுந்த பக்தியுடன் நினைவுகூர்கின்றனர்.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நீங்கள் வலக்கை செய்யும் கொடையை இடக்கை தெரியாதவாறு செயற்பட்டவர், அதுமட்டுமல்ல கர்தினல் இந்நாட்டின் குழந்தைகளுக்கு ஆற்றிய மகத்தான பணியினை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

எமது சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மனிதர்களின் பெரும் செல்வம் குழந்தைச் செல்வம் என்று. அதேபோன்றுதான் இயேசுநாதர் குறிப்பிடுகின்றார். எனக்காக ஒரு குழந்தையை அரவணைத்துக் கொண்டவர் என்னை அரவணைத்தவர் போன்றவராவார் என்று. இதன் பிரகாரம் தர்மதூத்த சிறுவர் சங்கத்தை அமைத்து நீங்கள் செயற்பட்டீர்கள்.

அது மாத்திரமல்ல “செத் சரண” செயற்திட்டத்தை ஆரம்பித்து இன, மத, ஜாதி பேதமின்றி சேவையாற்றி வந்துள்ழர்கள். இலங்கையில் மாத்திரமல்ல பல உலக நாடுகளிலும் நீங்கள் தர்மப் பிரசாரம் மேற்கொண்டுள்ழர்கள் அதேபோன்று இந்தோனேசியா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் வத்திக்கானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டு பாரிய பணியாற்றியுள்ழர்கள். மேலும், அனைத்து இன மக்களுடனும் நெருக்கமாக, சினேகபூர்வமாக செயற்பட்டுள்ழர்கள்.

இன்று இந்த நாட்டிலே ஒரு புறமாக கிழக்கிலிருந்தும் கடலோரமாக மட்டக்களப்பில் இருந்தும் இந்து பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செய்கின்றனர்.

மறுபுறமாக தேவேந்திரமுனையில் இருந்து கத்தோலிக்க மக்கள் மன்னார் மடுவிற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். அதற்கிடையே யாழ்ப்பாணம் சென்று பெளத்தர்கள் நாகதீப விகாரையில் வழிபடுகின்றனர்.

நாடு முழுவதிலும் இவ்வாறு சமய வழிபாடுகளிற்காக மக்கள் யாத்திரை செய்வதன் மூலம் தெளிவாவது சமய ரீதியான சகவாழ்வாகும்.

அன்று மடு தேவாலயத்தை அண்டி பயங்கரவாதிகள் அமைத்திருந்த பதுங்குழிகளை அழித்த அதே வேகத்தில் பயங்கரவாதிகளினால் அப்பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக