6 டிசம்பர், 2010

அத். பொருட்களை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய ஜனாதிபதி பணிப்பு

பண்டிகைக் காலத்திற்கென விசேட ஏற்பாடு;
ச. தொ. ச. கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்


பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்து விநியோகிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் கட்சியினர் எத்தனைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ச. தொ. ச. கிளைகளில் குறைந்த விலையில் மக்கள் பொருட் களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது.

சகல நகர்களிலும் ச.தொ.ச. கிளைகளைத் திறக்க நிதியினை ஜனாதிபதி வழங்கி யுள்ளார். நெல் கொள்வனவு சம்பந்தமாக முறையான திட்டம் வகுத்து அதற்கான நிதியினையும் குறைவின்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

நெல் கொள்வனவு பற்றி ஐ. தே. க.வினர் விமர்சிக்கின்றனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் நெல் களஞ்சிய சாலைகள் மூடப்பட்டதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்தது இதுவே முதல் தடவை. 30 ற்கும் 34 ரூபாவிற்கும் நெல் கொள்வனவு நடைபெறுகிறது.

தற்போது உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஐ. தே. க. வினர் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் ச. தொ. ச. மூலம் குறைந்த விலையில் நாம் பொருட்களை விற்பனை செய்கிறோம்.

தேவையான பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதனால்தான் பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அமைச்சரவையானது கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய போதும் நாம் இதுவரை ஒரு கிலோ இறைச்சியையாவது இறக்குமதி செய்யவில்லை.

தேவையேற்படும் போது முட்டை, கோழி இறைச்சி, பெரிய வெங்காயம் போன்றவற்றை இறக்குமதி செய்வோம். பண்டிகைக் காலங்களில் இந்த இறக்குமதி நடைபெறும்.

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. அரிசி, பருப்பு போன்றவற்றை இதில் குறிப்பிடமுடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்த சவால்கள் வேறு எந்த தலைவர்களுக்கும் இருந்ததில்லை.

வெல்ல முடியாது என்ற யுத்தத்தை வென்றார். யுத்தத்தோடு அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பியவர் அவர்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார். அரசாங்க ஊழியர்கள் பற்றி பேச எதிர்க் கட்சித் தலைவருக்கு எந்த அருகதையும் இல்லை. அரச ஊழியர்கள் தொகையை சரி பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டவர் அவர் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக