6 டிசம்பர், 2010

புதிய வரவு செலவு திட்டத்தின் பயன்; 80 இலட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

தற்போது ஓய்வூதிய சம்பளம் கிடைக்காத 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் வழங்கும் நிதியத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

அதன்படி தனியார் துறையில் பணிபுரியும் 20 இலட்சம் பேர், வெளிநாடுகளில் பணிபுரியும் 30 இலட்சம், விவசாய, மீன்பிடி, சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 30 இலட்சம் பேர் என மொத்தமாக 80 இலட்சம் பேர் பயன் பெறுவர். இவ்வாறான இரு நிதியங்கள் முறையான ஏற்பாடுகளுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை முகாமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் தர்மா தீரசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான நிதியத்தை ஆரம்பிக்க ஆயிரம் மில்லியன் ரூபாவும், நிலையற்ற துறைகளில் பணிபுரிவோர் தொடர்பாக நிதியத்தை ஆரம்பிக்க ஆயிரம் மில்லியன் ரூபாவும் ஒதுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் துறையில் பணிபுரிவோர் தமது சம்பளத்தில் 2 சதவீதத்தையும் வேலை வழங்குநர் 2 சதவீதத்தையும் இந்த நிதியத்துக்கு கொடுக்க வேண்டும்.

அதற்கு புறம்பாக சேவை வழங்குநரினால் சேவையாளரின் முழுமையான ஓய்வூதிய கொடுப்பனவுக்கான தொகையை இந்த நிதியத்துக்கு வழங்கவேண்டும். சேவையாளர் ஓய்வூதியம் பெறும்போது பெற்றுக்கொள் ளும் ஊழியர் சேமலாப நிதியத்தின் 2 சதவீதத்தை எதிர்கால ஓய்வூதிய சம்பளத்துக்காக இந்த ஓய்வூதிய சம்பள நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

இந்த நிதியத்தில் இருந்து ஓய்வூதிய சம்பள நன்மையை பெற குறைந்தபட்சம் 10 வருடங்கள் அதற்கு பங்களிப்பு செலுத்தப்பட வேண்டும்.

விவசாய கைத்தொழில், மீன்பிடி, போக்குவரத்து நிர்மாணம் ஆகிய துறைகளில் உள்ள 30 இலட்சம் பேருக்கும் சமூக பாதுகாப்பு சபையின் உதவியுடன் பிரஜைகள் ஓய்வூதிய மற்றும் பாதுகாப்பு நிதியம் அமைக்கப்படுகிறது.

10 வருடங்கள் இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யப்பட வேண்டியதுடன் 65 வயதை அடைந்த பின்னர் இதன் பயனை பெற உரித்துடையவர் ஆவார். இதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் 30 இலட்சம் பேருக்கு ஓய்வூதிய சம்பளமொன்றை பெற்றுக் தருவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின்படி செயற்படுத்தப்படவுள்ள திட்டத்தின்படி இம்முறை வரவு - செலவு திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலை நாட்டு வேலை ஊக்குவிப்பு மற்றும் நலன் பேணல் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை ஓய்வூதிய நிதியம் என பெயரிடப்பட்டுள்ள நிதியத்துக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் வருடமொன்றுக்கு குறைந்த பட்சம் 12 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட வேண்டும். இவ்வாறு இரண்டு வருட காலத்துக்கு பணம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆண்கள் 65 வயதையும் பெண்கள் 60 வயதையும் தாண்டிய பின் இந்த நிதியத்தில் இருந்து ஓய்வூதிய சம்பளம் பெற முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக